பாட்னா: தன் கைதவறி பால் கலன் கொட்டி, ரூ. 250 இழப்பு ஏற்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திமீது இந்திய ஆடவர் ஒருவர் புகாரளித்துள்ளார்.
இம்மாதம் 15ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராகுல், “பாஜகவும் ஆர்எஸ்எஸ் இயக்கமும் இந்தியாவின் எல்லா நிறுவனங்களையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டன. எனவே, தற்போது, பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமின்றி, இந்திய அரசுக்கு எதிராகவும் போராடி வருகிறோம்,” என்று பேசியிருந்தார்.
அவரது பேச்சால் அதிர்ச்சி அடைந்ததாகவும் அதனால் தன் கையிலிருந்த பால் கலன் தவறி கீழே விழுந்ததாகவும் கூறி, பீகார் மாநிலம், சமஸ்திபூரைச் சேர்ந்த முகேஷ் சௌத்ரி என்ற ஆடவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அக்கலனில் ஐந்து லிட்டர் பால் இருந்தது என்றும் ஒரு லிட்டர் பாலின் விலை 50 ரூபாய் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய நீதித்துறைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் ராகுல்மீது விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சௌத்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, அசாம் மாநிலத் தலைநகர் கௌகாத்தியிலும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு எதிராகக் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.