பாட்னா: ரயில் சன்னல் வழியாக பயணி ஒருவரின் கைப்பேசியைப் பறிக்க முயன்ற திருடனுக்குப் பயணிகள் தக்க பாடம் புகட்டினர்.
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
பீகாரில் சன்னல் வழியாக ரயில் பயணிகளிடம் வழிப்பறி செய்வது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில், ரயில் மெதுவாகக் கிளம்பத் தொடங்கியபோது, உள்ளே அமர்ந்திருந்த பயணியின் கையிலிருந்த கைப்பேசியை அந்தத் திருடன் பறிக்க முயன்றான்.
ஆனால், எச்சரிக்கையாக இருந்த அப்பயணி, அத்திருடனின் கையைப் பிடித்துக்கொள்ள, அவன் ரயிலுக்கு வெளியே தொங்க நேர்ந்தது. சக பயணிகள் சிலரும் சேர்ந்து திருடனின் கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டனர். ரயிலும் வேகமெடுக்கவே அத்திருடன் தொங்கியபடியே சென்றான்.
கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவிற்குத் தொங்கியபடியே சென்ற அவன், பின்னர் தன்னுடைய கூட்டாளிகளால் மீட்கப்பட்டான். இச்சம்பவத்தை ரயில் பயணி காணொளியாகப் பதிவுசெய்து, சமூக ஊடகத்தில் பதிவேற்றினார்.
கடந்த 2022ஆம் ஆண்டு பீகாரில் நிகழ்ந்த இதே போன்றதொரு சம்பவத்தில், கைப்பேசியைப் பறிக்க முயன்ற திருடன் கிட்டத்தட்ட பத்துக் கிலோமீட்டர் தொலைவிற்கு ரயிலுக்கு வெளியே இருந்தபடி தொங்கிச் செல்ல நேரிட்டது. ரயில் ஒரு நிலையத்தை நெருங்கியபோது அவன் தன்னை விடுவித்துக்கொண்டு, தப்பியோடினான்.

