இருதரப்பு வளர்ச்சி, வளத்துக்கான புதிய வழிகளைத் திறக்கும்: பியூஷ் கோயல்

இருதரப்பு வளர்ச்சி, வளத்துக்கான புதிய வழிகளைத் திறக்கும்: பியூஷ் கோயல்

2 mins read
e3ce6bef-3a34-4ac1-ae34-6260b8bc20b2
திரு பியூஸ் கோயல் ஒட்டாவாவில் கனடியப் பிரதமர் மார்க் கார்னியை சந்தித்துப் பேசினார். - படம்: பிஐபி

ஒட்டாவா: இந்தியா, கனடா இடையே பொருளியல் பங்காளித்துவ ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக இருப்பதாக இந்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய ஒப்பந்தம் இருதரப்பு வளர்ச்சி, வளத்துக்கான புதிய வழிகளைத் திறக்கும் என்று ஒட்டாவாவில் கனடியப் பிரதமர் மார்க் கார்னியை சந்தித்துப் பேசிய பிறகு அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக தமது சமூக ஊடகப் பதிவு ஒன்றில் அவர் விரிவாகப் பதிவிட்டுள்ளார்.

கனடியப் பிரதமருடனான சந்திப்பின்போது இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் உறுதிப்படுத்துவது குறித்து தொலைநோக்குப் பார்வையுடன் விவாதித்ததாகவும் இருநாடுகளுக்கும் இடையே விரிவான பொருளியல் ஒப்பந்தம் விரைவில் முடிவுக்கு வரும் என்பதில் நம்பிக்கை உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

திரு கார்னியின் அண்மைய இந்தியப் பயணத்தை நினைவுகூர்ந்த திரு கோயல், அந்தப் பயணம் இந்தியா-கனடா பங்காளித்துவத்துக்குப் புதிய உத்வேகத்தையும் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையையும் அளித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் விரிவடைந்து வரும் உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், தளவாடங்கள், மின்னிலக்க உள்கட்டமைப்பு, பயனீட்டாளர் துறைகள் உள்ளிட்டவை மேம்பட்ட ஒத்துழைப்பு, முதலீடுகளுக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை வழங்குவதாகவும் திரு கோயல் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா-கனடா இடையேயான விரிவான பொருளியல் பங்காளித்துவ ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக, திரு கோயல் கனடாவின் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மனிந்தர் சித்துவுடன் ஆக்கபூர்வமான இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினார்.

வணிகங்களுக்கும் குடிமக்களுக்கும் உறுதியான பலன்களை வழங்கும் ஒரு சமச்சீரான, வணிகரீதியாக ஓர் அர்த்தமுள்ள, லட்சியமிக்க ஒப்பந்தத்தை நோக்கிப் பணியாற்றுமாறு இரு நாடுகளின் குழுக்களுக்கும் அமைச்சர்கள் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.

திரு கோயல், கனடாவின் வேளாண்மை, உணவுத்துறை அமைச்சர் ஹீத் மெக்டொனலுடுடனும் ஒரு சந்திப்பை நடத்தியதாக இந்திய வெளியுறவு அமைச்சு கூறியது.

இந்திய விவசாயிகள், வேளாண் உற்பத்தியாளர்களின் வருமானத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, உணவுப் பாதுகாப்பு, நிலைத்தன்மை, வேளாண் தொழில்நுட்பம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வேளாண் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், உணவு பதப்படுத்தும் துறையில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்வது குறித்தும் இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
கனடாபொருளியல்வர்த்தகம்ஒப்பந்தம்தளவாடங்கள்வளர்ச்சி