இருதரப்பு உறவுகள்: பிரதமா் மோடி - இலங்கை அதிபா் ஆலோசனை

இருதரப்பு உறவுகள்: பிரதமா் மோடி - இலங்கை அதிபா் ஆலோசனை

2 mins read
b93be874-e86c-402a-be5d-0b8f39fa0fdf
ஏஐ உச்சநிலை மாநாட்டுக்கு வந்த இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயகவை வரவேற்ற இந்தியப் பிரதமர் மோடி - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: புதுடெல்லியில் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடியும் இலங்கை அதிபா் அனுரகுமார திசாநாயக்கவும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20) சந்தித்துப் பேசினர்.

அப்போது, இரு தலைவர்களும் அண்மையில் இருதரப்பு உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆலோசித்தனா்.

புதுடெல்லி பாரத மண்டபத்தில் ஐந்து நாள்களாக நடைபெற்று வந்த அனைத்துலக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சநிலை மாநாடு வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

இந்த மாநாட்டில் பங்கேற்க வந்த உலகத் தலைவா்களுடன் பிரதமா் மோடி கடந்த இரண்டு நாள்களாக இருதரப்பு சந்திப்பில் ஈடுபட்டாா்.

இலங்கை அதிபர் திசாநாயக்க, ஸ்லோவாக்கியா அதிபர் பீட்டர் பெல்லேகிரினி, லிச்டென்ஸ்டைன் பட்டத்து இளவரசர் அலாய்ஸ், மொரிஷியஸ் அதிபர் நவீன்சந்திர ராம்கூலம் ஆகியோரை இந்தியப் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை தனித்தனியாக சந்தித்துப் பேசினாா்.

இலங்கை அதிபா் உடனான சந்திப்பு குறித்து தமது ‘எக்ஸ்’ பதிவில், “இலங்கை அதிபா் திசாநாயக்க உடனான சந்திப்பு மிகச் சிறப்பாக இருந்தது. இருநாட்டு உறவில் அண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விவாதித்தோம். மதிப்புமிக்க அண்டை நாடு என்ற முறையில் இலங்கையுடன் நட்புறவு வலுப்படுத்தப்படுகிறது. எரிசக்தி, இணைப்பு, உள்கட்டமைப்பு, சுகாதாரம், திறன்மேம்பாடு, கலாசாரம், பொருளியல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது,” என்று குறிப்பிட்டிருந்தார்.

இருதரப்புச் சந்திப்பின்போது செயற்கை நுண்ணறிவு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக பிரதமர் மோடியை அனுரகுமார திசாநாயக்க பாராட்டினார்.

மேலும், டிட்வா புயல் பாதிப்புக்கு இந்தியா நிதி உதவி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்ட தகவலில், “எங்கள் வரலாற்று உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பொருளியல், வர்த்தகம் மற்றும் கலாசார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விரிவான விவாதங்களை நடத்தினோம். அண்மைய டிட்வா சூறாவளியின்போது இந்தியாவின் ஆதரவுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று திசாநாயக்கவும் கூறியுள்ளார்.

இலங்கைக்கு டிட்வா புயல் பாதிப்புக்காக இந்தியா முதல் நாடாக ரூ.4,000 கோடிக்குமேல் மறுசீரமைப்புத் தொகுப்புக்கு உறுதியளித்தது. இதில் சாலைகள், ரயில்வே மற்றும் பாலங்கள் மறுசீரமைப்பு, வீடுகள் மறுகட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித்துறைகளுக்கு ஆதரவாக அந்த உதவி இருந்தது.

மேலும் பிரதமர் மோடி, ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரசுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டார்,

அப்போது, ஐநா சீா்திருத்தங்கள் அனைவரையும் உள்ளடக்கிய ஏஐ தொழில்நுட்பம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவர்கள் பேசினர்.

குறிப்புச் சொற்கள்