மக்களவைத் தொகுதிகளை 816ஆக அதிகரிக்க மசோதா

மக்களவைத் தொகுதிகளை 816ஆக அதிகரிக்க மசோதா

2 mins read
ஏப்ரல் 16ல் நாடாளுமன்ற சிறப்புக்கூட்டம்
33f9dcac-fdda-4dd2-82d1-3cd9fe713f53
புது மசோதாக்களை நிறைவேற்ற, வரும் ஏப்ரல் 16ஆம் தேதி நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூடவுள்ளது. - படம்: இந்து தமிழ் திசை
multi-img1 of 2

புதுடெல்லி: மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543ல் இருந்து 816ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான மசோதாக்களை நிறைவேற்ற, வரும் ஏப்ரல் 16ஆம் தேதி நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ஏப்ரல் 16ஆம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்றச் சிறப்புக்கூட்டம் நடைபெறும். முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற வேண்டியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“கடந்த 2023ல் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை விரைந்து செயல்படுத்துவதற்கு இந்தத் தொகுதிகள் அதிகரிப்பு என்பது அவசியமாகிறது.

“மொத்த தொகுதிகள் 816ஆக உயரும் போது, அவற்றில் மூன்றில் ஒரு பங்கு அதாவது 273 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்,” என்றார்.

அரசியல் ஆதாயம் தேடுவதாக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இதுகுறித்துக் கூறுகையில், “மத்திய அரசு உள்நோக்கத்துடன் இந்த மசோதாவைக் கொண்டு வருகிறது. இதன் மூலம் உத்தரப் பிரதேசம் போன்ற வடமாநிலங்களுக்கு 200 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும். ஆனால், தென்மாநிலங்களுக்கு 66 இடங்கள் மட்டுமே கிடைக்கும். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.

“ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றுவரும் சூழலில், இந்த மசோதாவைக் கொண்டு வருவது என்பது அரசியல் ஆதாயத்திற்காகவே. எனவே, இக்கூட்டத்தை ஏப்ரல் 29ஆம் தேதிக்குப் பிறகு தள்ளிவைக்க வேண்டும்,” என வலியுறுத்தினார்.

காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் இடஒதுக்கீடு வழங்குவதை காங்கிரஸ் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அதேசமயம், இவ்வளவு முக்கியமான தொகுதிகள் அதிகரிப்பு மாற்றத்தைக் கொண்டு வரும்போது, அதில் மத்திய அரசு ‘அரசியல் விளையாட்டை’ விளையாடக் கூடாது என்று அவர் எச்சரித்தார்.

குறிப்பாக மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அவசர அவசரமாக இந்த மசோதாவைக் கொண்டு வருவதன் நோக்கம் என்ன என்று கேள்வி எழுப்பிய அவர், இது போன்ற நாட்டின் முக்கிய முடிவுகளில் அனைத்துக் கட்சிகளோடும் கலந்தாலோசிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, “ஒரு மசோதாவை எப்போது கொண்டு வர வேண்டும் என்பது அரசுக்குத் தெரியும்,” எனத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்குப் பதிலளித்த அமைச்சர் கிரண் ரிஜிஜு, “பெண்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. இதில் அரசியல் செய்ய வேண்டாம்,” எனக் கேட்டுக்கொண்டார்.

ஏப்ரல் 16ஆம் தேதி தொடங்கும் இந்தச் சிறப்புக் கூட்டம் மூன்று நாட்களுக்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்