குற்றவியல் சட்டங்களை மாற்றியமைக்கும் மசோதாக்கள்

2 mins read
35d1d125-7990-4348-aa60-c3ec4072a20c
படம்: - தமிழ் முரசு

புதுடெல்லி: இந்திய அரசாங்கம் இந்தியக் குற்றவியல் சட்டங்களை முற்றிலும் மாற்றியமைப்பதற்கான மசோதாக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்திற்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா, குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்குப் பதிலாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, இந்திய சாட்சியச் சட்டத்திற்குப் பதிலாக பாரதிய சாக்ஷ்யா ஆகியவை இனி கடைப்பிடிக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்தது. அந்தச் சட்டங்களின் பெயர்கள் மட்டும் மாற்றப்படவில்லை என்றும் அவற்றின் அடிப்படைக் கூறுகளும் அமைப்புகளும் மாற்றப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஒருவரைக் கைது செய்வது, அவரை விசாரிப்பது, வழக்குகளை நடத்துவது, குற்றங்களைக் கண்காணிப்பது, சாட்சிகளை விசாரிப்பது போன்றவற்றை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பது அம்மூன்று சட்டங்களிலும் விளக்கப்பட்டுள்ளன.

இந்திய தண்டனைச் சட்டம் இந்தியா முழுவதும் காவல்துறையினர் பயன்படுத்தும் சட்டமாகும். ஆனால், இப்போது அதை முற்றிலும் மாற்றுவதற்கான மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளார் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

இப்போது பின்பற்றப்படும் இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவை ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்டன. ஆனாலும், இடைப்பட்ட காலத்தில் அவற்றில் பல மாற்றங்கள் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், திரு அமித் ஷாவின் மசோதாக்கள் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. அவற்றில் பல புதிய சட்டங்களும் விதிகளும் சேர்க்கப்பட்டுளளன. அவை பல பக்கங்கள் அடங்கியவை என்பதால் அவற்றில் இருக்கும் புதிய சட்டங்கள் குறித்த விவரங்கள் இனி கட்டங்கட்டமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிவினைவாதச் செயல்கள், ஆயுதமேந்திய கிளர்ச்சி, நாச வேலைகள் ஆகியனவும் இந்தியாவின் இறையாண்மை அல்லது ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தை விளைவிப்பது ஆகியவற்றின் தொடர்பில் புதிய குற்றம் ஒன்றும் சட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் பல இடங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்படும் நிலையில், புதிய சட்ட விதிகள் மசோதாக்களில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்