மும்பை: ஆசியாவின் ஆகப் பெரிய குடிசைப் பகுதிகளில் ஒன்றான இந்தியாவின் மும்பை மாநகரிலுள்ள தாராவி மறுசீரமைக்கப்பட இருக்கிறது.
பெருஞ்செல்வந்தரான கௌதம் அதானியின் சொத்துச் சந்தை நிறுவனத்திற்கு அதற்கான இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மும்பைப் பெருநகர வளர்ச்சி ஆணையப் பேராளர் ஒருவர் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். அதே வேளையில், அதானி குழுமத்தின் பேச்சாளர் அதனை உறுதிப்படுத்த மறுத்துவிட்டார்.
கடந்த ஆண்டு தாராவி மறுமேம்பாட்டுத் திட்ட ஒப்பந்தத்தை ரூ.5,070 கோடி (S$816 மில்லியன்) கொடுத்து ஏலத்தில் எடுத்தார் அதானி.
இந்தியாவின் நிதி மையமாகத் திகழும் மும்பையில் 250 ஹெக்டர் பரப்பளவில் அக்குடிசைப் பகுதி அமைந்துள்ளது.
‘ஸ்லம்டாக் மில்லியனேர்’ திரைப்படத்தின்மூலம் தாராவிமீது புகழ் வெளிச்சம் பாய்ந்தது. கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேர் அங்கு வசிப்பதாகக் கூறப்படுகிறது.
அப்பகுதியை நவீனமயமாக்க மும்பை மாநகராட்சி பல்லாண்டுகாலமாக முயன்று வந்தாலும் அது சாத்தியமாகவில்லை.
இந்நிலையில், தாராவி தொடர்பில் அதானி என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார் என்பது தெரியவில்லை.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவின் பரபரப்பான மும்பை விமான நிலையத்தை அதானியின் நிறுவனமே நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், தாராவியிலும் நவீன அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் அலுவலகங்களையும் கடைத்தொகுதிகளையும் அமைத்து, அம்மாநகரில் அதானி வலுவாகக் கால்பதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாராவியுடன் அதானி தொடர்புபடுத்தப்படுவதை எதிர்த்து அவ்வட்டாரவாசிகள் பல போராட்டங்களை நடத்தினர். தாங்கள் நகருக்கு வெளியே குடியமர்த்தப்படுவோமோ என்றும் சிறுசிறு அடுக்குமாடி வீடுகளில், மோசமான வசதிகளுடன் முடக்கப்படுவோமோ என்றும் அவர்கள் அச்சப்படுவதாகக் கூறப்பட்டது.
தாராவி மறுசீரமைப்புத் திட்டத்திற்கு மூன்று பில்லியன் அமெரிக்க டாலர் (S$4 பில்லியன்), அதாவது கிட்டத்தட்ட ரூ.25,000 கோடி செலவாகலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


