கோட்டயம்: கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. ஆலப்புலா மாவட்டத்தில் நெடுமுடி, செருத்தானா, கருவட்டா, கார்த்திகப்பள்ளி, அம்பலப்புழா தெற்கு, புன்னப்ரா தெற்கு, தகழி மற்றும் புறக்காடு பஞ்சாயத்துகளில் இந்த நோய் பதிவாகியுள்ளது. இதில் நெடுமுடியில் கோழிகளுக்கும், பிற வட்டாரங்களில் வாத்துகளுக்கும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து தமிழகத்தின் கேரள எல்லைகளில் உள்ள பண்ணைகளிலும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கோட்டயம் மாவட்டத்தில் குருபந்தரா, மஞ்சூர், கல்லுபுரக்கல் மற்றும் வேலூர் பகுதிகளில் இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு, கோழிகள் மற்றும் காடைகளில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து உடனடி நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கால்நடை பராமரிப்புத்துறை உத்தரவிட்டது.
பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கோழி, காடை இறைச்சி, முட்டை ஆகியவற்றை விற்பனை செய்வதற்கு கேரள மாநில அரசு தடை விதித்துள்ளது.
மேலும், பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள், வாத்துகள் மற்றும் காடைகளை மொத்தமாக அழிக்க கால்நடைப் பராமரிப்புத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டுக் காலங்களில் கோழி விற்பனை வழக்கமாக அதிகரிப்பதால், கோழிப் பண்ணை விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றார் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் ஜே. சின்சு ராணி.
நோய்ப் பரவலைத் தொடர்ந்து நிபுணர் குழுக்கள் ஏற்கெனவே களத்தில் பணியாற்றி வருவதாக அவர் கூறினார். கடந்த ஆண்டும் ஆலப்புழா, கோட்டயம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் இதே போன்ற பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டதாக அமைச்சர் சின்சு ராணி கூறினார்.

