சென்னை: லண்டனிலிருந்து 224 பயணிகள், 12 விமான ஊழியர்கள் என மொத்தம் 236 பேருடன் சென்னை நோக்கிச் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின்மீது பறவை மோதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜூலை 13ஆம் தேதி, அதிகாலை 3.30 மணிக்கு தரையிறங்க வேண்டிய அந்த விமானம், 500 அடி உயரத்தில் பறந்தபோது எதிர்பாராதவிதமாக அதன் முன்பகுதியில் பறவை மோதி, என்ஜினுக்குள் சிக்கிக்கொண்டது.
அதனைக் கண்டு அதிர்ச்சியான விமானி, மிகவும் சாதுர்யமாகச் செயல்பட்டு விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.
தரையிறங்கியதும், விமானப் பொறியாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் பாதிக்கப்பட்ட விமானத்தை முழுமையாக ஆய்வு செய்தனர்.
சேதம் ஏற்பட்டுள்ளதால், முறையான பராமரிப்புப் பணிகள் முடிவடையும் வரை விமானத்தை மீண்டும் இயக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால், அதே விமானத்தில் லண்டன் செல்ல முன்பதிவு செய்திருந்த 268 பயணிகளின் பயணம் பாதிக்கப்பட்டது.
அச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த புதுடெல்லியில் உள்ள இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட போதிலும், சென்னை விமான நிலையத்தில் இதனால் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

