புதுடெல்லி: பிஸ்லெரி நிறுவனக் குடிநீரின் பாதுகாப்பு குறித்து சர்ச்சை ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் போத்தலில் அடைக்கப்பட்ட நீரின் மாதிரிகளைச் சோதிக்க அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இந்திய உணவுப் பாதுகாப்பு, தரநிலைகள் ஆணையத்திற்கும் பிஸ்லெரி இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிஸ்லெரியின் போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீர் மாதிரி ஒன்று பரிசோதிக்கப்பட்டபோது, அது குடிக்க உகந்ததன்று எனக் கண்டறியப்பட்டது.
அதனால், நிறுவனத்தின்மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஆணையம் ஒப்புதல் அளித்தது.
பாதுகாப்பற்றதாகக் கண்டறியப்பட்ட குடிநீர்த் தொகுப்புகளை ஆணையம் மீட்டுக்கொண்டது.
ஆயினும், அடுத்தகட்ட சோதனைகளில் பிஸ்லெரி மாதிரிகள் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப இருப்பது தெரியவந்தது என அரசாங்க வட்டாரங்கள் ராய்ட்டர்சிடம் கூறின.
2025ஆம் ஆண்டு செப்டம்பரில் கோவா ஆலையில் தயாரிக்கப்பட்ட தொகுப்பு தொடர்பானது அவ்விவகாரம் என பிஸ்லெரி கூறியது.
ஆணையம் சேகரித்த ஆறு மாதிரிகளில் ஐந்து தரநிலைகளுக்கு ஏற்ப இருந்ததாகவும் ஆறாவது மாதிரியில் புரோமேட் அளவு வரம்பைவிட அதிகமாக இருந்ததாகவும் அது குறிப்பிட்டது. புரோமேட் வேதிப்பொருளை மனிதர்களுக்குப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் கொண்டதாக அனைத்துலகப் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நிறுவனத்தின் மேல்முறையீட்டின் அடிப்படையில் குடிநீர் மாதிரி மேல் ஆய்வுக்காக உணவு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்ட மாதிரியில் புரோமேட் அளவு வரம்பிற்குள் இருந்தது.
ஆயினும், பல்சுழற்சி நறுமணமிக்க ஹைட்ரோகார்பன்கள் கண்டறியப்பட்டதால் அது பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டதாக ஆணையம் கூறியது.
ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற மற்றோர் ஆய்வுக்கூடத்தில் நடத்தப்பட்ட சோதனையிலும் புரோமேட் அளவு வரம்பிற்குள் இருந்தது.
அதன் முடிவுகளை 2026 பிப்ரவரியில் சமர்ப்பித்ததாகவும், பதில் ஏதும் வராததால் விவகாரம் முடிந்துவிட்டதாகக் கருதியதாகவும் பிஸ்லெரி கூறியது.
மின்னஞ்சல் மூலமோ கடிதம் மூலமோ தமக்கு அறிவிப்பு வரவில்லை எனவும் குடிநீர்ப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து ஆணையத்திற்கு ஒத்துழைப்போம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்தது.
உணவு நிறுவனங்கள், மின்வணிக நிறுவனங்களுக்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகளை ஆணையம் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
