மும்பை: மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி அமைத்த பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.
இதையடுத்து அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சனிக்கிழமை காலை (நவம்பர் 23) தொடங்கியது.
ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான பெரும்பான்மையைப் பெற 145 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பா.ஜ.க. தலைமையிலான மஹாயுதி கூட்டணி 230 தொகுதிகளில் முன்னிலை பெற்று இருந்ததால் கிட்டத்தட்ட வெற்றி உறுதியானதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதில் பாரதிய ஜனதா கட்சி மட்டும் 127 தொகுதிகளில் முன்னிலை வகித்தது.
இதனால் மகாராஷ்டிராவில் பா.ஜ.க. தலைமையிலான தற்போதைய ஆளும் மஹாயுதி கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து பா.ஜ.க. கூட்டணிக் கட்சியினர் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
ஆளும் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், மகாராஷ்டிரா முதல்வரும் சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டேவுக்குத் தொண்டர்கள் இனிப்பு ஊட்டி உற்சாகமளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
“இது, மாபெரும் வெற்றி. மஹாயுதி கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று முன்பே கூறியிருந்தேன். சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் நான் நன்றி கூறுகிறேன்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இம்மாநிலத் தேர்தலில் சனிக்கிழமை பிற்பகல் நிலவரப்படி காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் சிவ சேனா (யுபிடி) 18 தொகுதிகளிலும் தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார்) 15 தொகுதிகளிலும் முன்னணியில் இருந்தன.
இதற்கிடையே பிரதமர் மோடி, “வளர்ச்சி வென்றது. நல்லாட்சி வென்றது. ஒன்றுபட்டால் இன்னும் உயரலாம். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை அளித்த சகோதரர்கள், சகோதரிகள் குறிப்பாக இளையர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி), தேசியவாத காங்கிரஸ் (துணை முதல்வர் அஜித் பவார் அணி) அடங்கிய மஹாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணியும் தேர்தலில் மோதின.
இதற்கிடையே, தேர்தல் முடிவை ஏற்க முடியாது என்று சிவசேனை (உத்தவ்) தலைவர் சஞ்சய் ரௌத் கூறியிருக்கிறார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் முடிவில் சந்தேகம் உள்ளது என்றும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ரௌத் குறிப்பிட்டுள்ளார்.