புதுடெல்லி: இந்தியாவில் உள்ள மொத்த சட்டமன்ற உறுப்பினர்களில் (எம்எல்ஏ) 10ல் ஆறு பேர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) உள்ளனர்.
2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி எம்எல்ஏக்களின் பலம் 39 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காட்டுக்குச் சுருங்கிவிட்டது.
அதேவேளை, பாஜகவின் பலம் 37 விழுக்காட்டிலிருந்து 44 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
பாஜகவும் அது இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியும் நாடு முழுவதும் தங்கள் ஆதிக்கத்தை பலப்படுத்தி வரும் நிலையில், அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தல்களில் எதிர்க்கட்சிகளும் ‘இண்டியா’ கூட்டணியும் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றன.
மத்தியில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றதுமுதல், நாடாளுமன்றத்தில் மட்டுமல்லாமல் மாநில சட்டமன்றங்களிலும் தனது பலத்தைக் கணிசமாக அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் நிலவிய உட்கட்சிப் பூசல்களுக்கு மத்தியில், அங்கு பாஜக தனது நிலையை வலுப்படுத்திவிட்டது.
2024 மக்களவைத் தேர்தலின்போது இந்தியாவின் ஒட்டுமொத்த 4,123 எம்எல்ஏக்களில் பாஜகவின் பங்கு 37.16 விழுக்காடாக இருந்தது. அண்மையில் சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு அது 43.97 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
அதேபோல, ஒட்டுமொத்த என்டிஏ கூட்டணியின் பலம் 2024ல் 50.84 விழுக்காடாக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பெற்ற அமோக வெற்றிகளுக்குப் பிறகு தற்போது அது 61.36 விழுக்காடாக உயர்ந்துள்ளது. அதாவது, இந்தியாவில் உள்ள 10 எம்எல்ஏக்களில் 6 பேர் என்டிஏ கூட்டணியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
2024ஆம் ஆண்டு என்டிஏவில் 2,096 எம்எல்ஏக்கள் இருந்த நிலையில், தற்போது 434 எம்எல்ஏக்கள் அதிகரித்து 2,530 எம்எல்ஏக்களாகிவிட்டது. இதில் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை மட்டும் 1,532 இடங்களிலிருந்து 1,813ஆக உயர்ந்துள்ளது.
அதேவேளை, 1,603ஆக இருந்த இண்டியா கூட்டணியின் பலம் தற்போது 1,011ஆகக் குறைந்துவிட்டது. ஈராண்டுகளில் அந்தக் கூட்டணி 592 எம்எல்ஏக்களை இழந்துவிட்டது.
எந்தவொரு பெரிய கூட்டணியிலும் இல்லாத பிற கட்சிகளின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 321லிருந்து 563 ஆக அதிகரித்துள்ளது. அவர்களின் எண்ணிக்கை 242 அதிகரித்துள்ளது. மொத்த எண்ணிக்கையில் அவர்களின் விகிதம் 13.66 விழுக்காடு.
இண்டியா கூட்டணியில் ஏற்பட்ட பிளவுகள் அது சரிவைச் சந்திக்க முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஏற்கெனவே அந்தக் கூட்டணியிலிருந்து விலகி நிற்கும் நிலையில், அண்மையில் திமுகவும் அதிலிருந்து வெளியேறியது.
2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற 11 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக தனித்து 281 எம்எல்ஏக்களைக் கூடுதலாகப் பெற்றுள்ளது. அதன் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் 36 இடங்களையும் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) 20 இடங்களையும் சிவசேனா 19 இடங்களையும் கூடுதலாகப் பெற்றுள்ளன.
மறுபுறம், எதிர்க்கட்சிகள் தரப்பில் காங்கிரஸ் கட்சி 18 எம்எல்ஏ இடங்களை இழந்துள்ளது. மேலும், திமுக 75 இடங்களையும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 51 இடங்களையும் ஆம் ஆத்மி கட்சி 37 இடங்களையும் இழந்து பலவீனமடைந்துள்ளன.

