திருவனந்தபுரம்: காங்கிரஸ், பாஜகவினர் இடையே புது வகை மோதல் தொடங்கியுள்ளது.
தங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் காணவில்லை என காங்கிரஸ் எம்பி தொகுதியில் பாஜகவினரும், இதேபோல் பாஜக எம்பி தொகுதியில் காங்கிரசாரும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
கேரள மாநிலம், வயநாடு தொகுதியை நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கும் காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி நீண்ட நாள்களாகத் தனது தொகுதிக்கு வரவில்லை என்று அங்குள்ள மக்கள் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக பாஜக அண்மையில் குற்றஞ்சாட்டியது.
பதிலுக்கு, கேரள மாநிலம் திருச்சூர் நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி, தன் தொகுதி பக்கம் எட்டிப்பார்ப்பதில்லை என்று காங்கிரஸ் சாடியது.
இந்நிலையில், இருதரப்பினரும் காவல்துறையை அணுகியுள்ளனர்.
‘பிரியங்கா காந்தியைக் காணவில்லை’ எனக் கேரள பாஜக திங்கட்கிழமை காவல்துறையில் புகார் அளித்தது. இதேபோல், ‘மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியைக் காணவில்லை’ என கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் மாணவர் சங்கம் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறது.
கேரள பாஜக பட்டியல் பழங்குடியினர் தலைவர் முகுந்தன் பள்ளியாரா தாக்கல் செய்த புகாரில், காங்கிரஸ் தலைவரான பிரியங்கா காந்தியைக் கடந்த மூன்று மாதங்களாக வயநாடு தொகுதி பக்கம் காணவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
“கேரளாவின் மிக மோசமான பேரழிவுகளில் ஒன்றான சூரல்மலையைப் பிரியங்கா காந்தி பார்வையிடவில்லை. நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட, கோடிக்கணக்கில் சேதங்களை ஏற்படுத்திய சூரல்மலைப் பகுதிக்கு அவர் செல்லாதது ஏன் எனத் தெரியவில்லை,” என்றும் அந்தப் புகார் மனுவில் மேலும் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, தனது தொகுதி, மாவட்ட மக்களால் சிறிது காலமாக ‘அணுக முடியாதவராக’ இருந்தார். கடந்த மூன்று மாதங்களாக அவரைக் காணவில்லை,” என்று கேரள காங்கிரஸ் கட்சியின் மாணவர் சங்கம் புகார் மனுவில் கூறியுள்ளது.