கோல்கத்தா: மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்காக அம்மாநிலத்தை ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதா கட்சியும் ஏறக்குறைய ரூ.31.57 கோடி தொகையை கூகல், மெட்டா தளங்களில் விளம்பரம் செய்வதற்காகச் செலவிட்டுள்ளன.
அரசியல் கட்சிகள் தற்போது இணையவழி விளம்பரங்களில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. அதன்மூலம் கட்சிக்கொள்கைகள், தங்கள் அரசு செய்த சாதனைகள் ஆகியவற்றை விரைவாக மக்களிடம் கொண்டுசேர்க்க முடியும் எனக் கருதுவதே இதற்கு முக்கியக் காரணம்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களில் மட்டுமே பாஜக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகள் இத்தகைய விளம்பரங்களுக்காக கோடிக்கணக்கில் பணம் செலவிட்டுள்ளன.
கடந்த மார்ச் 15 முதல் ஏப்ரல் 27ஆம் தேதி வரை பாஜக ரூ.16.98 கோடியையும் திரிணாமூல் காங்கிரஸ் ரூ.14.59 கோடியையும் செலவிட்டுள்ளன.
இரு முக்கியக் கட்சிகளும் கூகல் தளத்தின் மூலம் ரூ.23.08 கோடியும் மெட்டா மூலம் ரூ.8.49 கோடியும் விளம்பரங்களுக்காகச் செலவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்க பாஜக, கூகல் தளத்தில் மட்டும் கடந்த மார்ச் 15 முதல் ஏப்ரல் 27 வரை 8,405 விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. இதற்கு ரூ.12.53 கோடி செலவானது.
இதே காலகட்டத்தில் திரிணாமூல் காங்கிரசுக்காக தேர்தல் உத்திகளை அமைத்துவரும் ‘ஐபேக்’ நிறுவனம் ‘கூகல்’ தளத்தில் 1,181 விளம்பரங்களை வெளியிட ரூ.10.55 கோடி செலவிட்டுள்ளது.
கட்சிகளைத் தவிர்த்து வேட்பாளர்களும் தனிப்பட்ட வகையில் இதுபோன்ற விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றனர்.

