ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாகச் சட்டமன்றக் கூட்டம் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதும் தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவர் அப்துல் ரஹீம் சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார்.
அந்தக் கூட்டத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் வஹீத் பாரா, ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்புத் தகுதியை நீக்கியதை எதிர்த்துத் தீர்மானம் ஒன்றைத் தாக்கல் செய்து, சிறப்புத் தகுதியை மீண்டும் அளிப்பது தொடர்பாக மத்திய அரசு, சட்டமன்ற உறுப்பினர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதற்குப் பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். இதனால் திங்கட்கிழமை சட்டமன்றக் கூட்டம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து புதன்கிழமை (நவம்பர் 6) சட்டமன்றம் மீண்டும் கூடியது. அப்போது காஷ்மீருக்குச் சிறப்புத் தகுதி வழங்குவது தொடர்பாக வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அதையடுத்து 15 நிமிடங்களுக்கு அவை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் அவை கூடியபோது மீண்டும் அமளியில் ஈடுபட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகருக்கு எதிராகக் கூச்சலிட்டனர். இதையடுத்து சபாநாயகர் அப்துல் ரஹீம், கூட்டத்தொடரை புதன்கிழமை முழுவதும் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

