சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஒன்றை பாரதிய ஜனதா கட்சி மார்ச் 26ஆம் தேதி நடத்தியது.
சென்னையில் நடந்த கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை பங்கேற்கவில்லை. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில், அக்கட்சி போட்டியிட உள்ள 27 தொகுதிகளுக்கான உத்தேச வேட்பாளர் பட்டியல் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதனிடையே, அண்ணாமலை போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட அரவக்குறிச்சி அல்லது கோவை சிங்காநல்லூர் தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை.
எனினும், பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள தொகுதியில் அண்ணாமலையைப் போட்டியிட வைக்க அக்கட்சியின் தலைமை அவரிடம் ஆலோசனை நடத்திவருவதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

