தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் குடும்பமாக களமிறங்கும் பாஜகவினர்

2 mins read
4121b816-66a3-4bec-a9a6-a8a3ad041b85
மேளதாளத்துடன் குடும்பமாக மக்களைச் சந்தித்து வாக்குச் சேகரிக்கும் முதல்வர் ஹேமந்த் சோரன். - படம்: ஊடகம்
multi-img1 of 2

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் வரும் நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலில் எப்போதும் இல்லாத அளவில் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் வாரிசுகளையும் குடும்பத்தினரையும் களமிறக்கியுள்ளனர்.

முக்கியமாக வாரிசு அரசியல் பற்றி குறைகூறி வரும் பாரதிய ஜனதா கட்சியிலும் ஏராளமானோர் குடும்ப சகிதமாக தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.

ஜார்க்கண்ட்டின் பாஜக முன்னாள் முதல்வர் ரகுவர் தாஸின் மருமகள் பூர்ணிமா சாஹுவுக்கு ஜாம்ஷெட்பூர் கிழக்குத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் இந்தத் தொகுதியில் பூர்ணிமா நிச்சயம் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான அர்ஜுன் முண்டாவின் மனைவி மீரா முண்டாவுக்கு பாஜக வாய்ப்பளித்துள்ளது.

சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக இருந்து ஜார்க்கண்ட் முதல்வரானவர் மதுகோடா. தற்போது பாஜகவில் இணைந்துள்ள மதுகோடாவின் மனைவி கீதா கோடா ஜெகந்தாத்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

ஹேமந்த் சோரனின் மைத்துனி சீதா சோரன். கடந்த தேர்தலில் பாஜகவில் இணைந்து தும்கா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு சிபுசோரனிடம் தோற்றார்.

எனவே, சீதாவுக்கு மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் ஜம்தாரா தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது.

ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவராக இருந்த சம்பத் சோரனின் மகன் பாபுலால் சோரனும் பாஜக சார்பில் கட்ஷிலா தொகுதியில் போட்டியிடுகிறார்.

ஹேமந்த் சோரன் கைதாகி சிறை சென்றபோது சம்பய் சோரன் தற்காலிக முதல்வராக இருந்தவர். மீண்டும் ஹேமந்த் முதல்வரானவுடன் அதிருப்தி அடைந்து பாஜகவில் இணைந்தார்.

பாஜக கூட்டணியில் உள்ள அனைத்து மாணவர் சங்க கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சந்திர பிரகாஷ் சௌத்ரி மனைவி சுனிதா சௌத்ரி, அக்கட்சிக்காக ராம்கரில் போட்டியிடுகிறார். சந்திர பிரகாஷின் சகோதரர் ரோஷன் லாலும் செளத்ரி பர்காகாவ்ன் தொகுதியில் போட்டியிடுகிறார்.

முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரர் வசந்த் சோரன், ஜேஎம்எம் சார்பில் தும்காவில் போட்டியிடுகிறார். முதல்வர் ஹேமந்த் சிறையிலிருந்தபோது அவரது மனைவியான கல்பனா முர்மு சோரன், ஜார்க்கண்ட் காந்தே தொகுதி இடைத்தேர்தலில் வென்று சட்டமன்ற உறுப்பினராகிவிட்டார்.

ஹேமந்தின் தந்தையும் முன்னாள் முதல்வருமான சிபு சோரன் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். தொடர்ந்து மேலும் வெளியாக உள்ள வேட்பாளர்கள் பட்டியலிலும் பல குடும்பத்தினரும் இடம்பெற இருப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்