தேசிய அரசியல் கட்சிகளில் அதிக வருமானத்தை ஈட்டிய பாஜக: ஜனநாயகத் தேர்தல் சீர்திருத்த சங்கம் தகவல்

தேசிய அரசியல் கட்சிகளில் அதிக வருமானத்தை ஈட்டிய பாஜக: ஜனநாயகத் தேர்தல் சீர்திருத்த சங்கம் தகவல்

2 mins read
83b9b839-6951-489a-988a-694adb9aa65b
தேசிய கட்சிகளின் வருவாயில் கணிசமான பங்கு தேர்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் கிடைக்கிறது. அந்த வகையில் பாஜகவுக்கு இப்பத்திரங்கள் மூலம் ரூ.1,685 கோடி கிடைத்துள்ளது. - சித்திரிப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவில் உள்ள தேசிய அரசியல் கட்சிகளில் கடந்த நிதியாண்டில் பாஜக அதிக வருமானத்தை ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் அந்தக் கட்சியின் வருவாய் ரூ.4,340 கோடியாக அதிகரித்துள்ளது.

இது இந்தியாவில் உள்ள ஆறு தேசிய கட்சிகள் ஈட்டிய மொத்த வருமானத்தில் ஏறக்குறைய 75 விழுக்காடாகும்.

ஜனநாயகத் தேர்தல் சீர்திருத்த சங்கம் வெளியிட்ட அறிக்கையின் மூலம் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளன.

பாஜக தான் ஈட்டிய வருவாயில் சுமார் 50 விழுக்காட்டுத் தொகையை, அதாவது ரூ.2,212 கோடியைச் செலவிட்டதாக அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

ஆட்சியில் இருந்தபோது அதிக வருமானம் ஈட்டிய காங்கிரஸ் கட்சிக்கு கடந்த நிதியாண்டில் ரூ.1,225 கோடி மட்டுமே வருமானமாகக் கிடைத்துள்ளது. அதில், ரூ.1,025 கோடி அதாவது 84 விழுக்காட்டுத் தொகையை அக்கட்சி செலவிட்டுள்ளது.

தேசிய கட்சிகளின் வருவாயில் கணிசமான பங்கு தேர்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் கிடைக்கிறது. அந்த வகையில் பாஜகவுக்கு இப்பத்திரங்கள் மூலம் ரூ.1,685 கோடி கிடைத்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.828 கோடியும் ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.10 கோடியும் கிடைத்திருக்கிறது. மூன்று கட்சிகளும் சேர்ந்து தேர்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் ரூ.2,524 கோடியைத் திரட்டியுள்ளன என்றும் இது அக்கட்சிகளின் மொத்த வருவாயில் 43.3 விழுக்காடு என்றும் தெரிய வந்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல்களைத் திரட்டியுள்ளதாக இச்சங்கம் தெரிவித்துள்ளது. ஜனநாயகச் சீர்திருத்த சங்கம் கேட்ட விவரங்களைப் பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ளது.

தனக்குக் கிடைத்த நிதியில் காங்கிரஸ் கட்சி ரூ.619 கோடியைத் தேர்தல் செலவுகளுக்காக ஒதுக்கியது என்றும் ரூ.340 கோடியை நிர்வாக மற்றும் பொதுச் செலவுகளுக்காக ஒதுக்கியது என்றும் மேற்கண்ட அறிக்கை தெரிவிக்கிறது.

இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகப் பணிகளுக்காக ரூ.56 கோடியையும் ஊழியர்களின் ஊதியத்துக்காக ரூ.47.57 கோடியையும் செலவிட்டுள்ளது.

மேலும், நன்கொடைப் பத்திரங்கள் தவிர, வேறு வழிகளில் கிடைத்த வருவாய் குறித்த தகவல்களை காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் மட்டுமே தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பட்டியலில் அதிமுக, திமுக போன்ற மாநிலக் கட்சிகளின் வருவாய் விவரங்கள் ஏதும் இடம்பெறவில்லை.

குறிப்புச் சொற்கள்