புதுடெல்லி: இந்தியா முழுவதும் உள்ள ‘ஜென் ஸீ’ தலைமுறையினரைக் கவரும் வகையில் புதிய பிரசாரக் குழு ஒன்றை பாரதிய ஜனதா கட்சி அமைத்துள்ளது.
புதுடெல்லியில், அக்கட்சியின் தலைவர் நிதின் நவீன் தலைமையில் புதிய தேசிய நிர்வாகக் குழுவின் உயர்நிலைக் கூட்டம் சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 22) நடைபெற்றது. அக்கூட்டத்தில் இளம் தலைமுறையினரைக் கவர்வதற்கான பிரசாரக் குழு உருவாக்கப்பட்டது.
அக்குழுவில் ஸ்மிருதி இராணி, வினோத் தாவ்டே, ஹர்ஷ் சங்வி, ஓ.பி. சவுத்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், ‘வந்தே மாதரம்’ தேசியப் பாடல் தொடர்பான தீர்மானம் ஒன்றும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடலின் இரு சரணங்கள் மட்டுமே பாடப்படும் என அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இம்முடிவை பாஜக மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, வந்தே மாதரம் பாடலின் சிறப்பைக் காக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தேசியக் கௌரவ அவமதிப்புத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, வந்தே மாதரம் தேசியப் பாடலுக்குச் சட்டபூர்வ பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே, புதுடெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் ஆகஸ்ட் 22ஆம் தேதி மாலை அக்கட்சியின் புதிய நிர்வாகிகளைப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.


