இந்தியாவில் கல்விக் கட்டமைப்பை பாஜக சீரழித்து விட்டது: ராகுல்

கேள்வி கேட்கும் மாணவர்களைக் கண்டு அதிகார அமைச்சு அஞ்சுகிறது

இந்தியாவில் கல்விக் கட்டமைப்பை பாஜக சீரழித்து விட்டது: ராகுல்

படம்: தி ட்ரிபியூன்

20 Sep 2026 - 2:34 pm

2 mins read

இந்தூர்: கேள்வி எழுப்பும் மாணவர்களைக் கண்டு தற்போதைய அதிகார அமைப்பு அஞ்சுகிறது. கண்மூடித்தனமாகப் பின்பற்றுபவர்களையே அது ஊக்குவிக்கிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

“மாணவர்கள்தான் இந்தியாவின் எதிர்காலம். ஆனால், அதானி, அம்பானி, அமைப்பு குறித்து மாணவர்கள் கேள்வி எழுப்பினால், அவர்களை எதிர்க்கிறார்கள். நாட்டில் உள்ள வெறுப்புணர்வை மாணவர்களால் மட்டுமே ஒழிக்க முடியும்,” என்றார் அவர்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் சனிக்கிழமை (செப்டம்பர் 20) நடைபெற்ற மாணவர் குரல் நிகழ்ச்சியில், வினாத்தாள் கசிவு, அரசுப் பணி நியமன முறைகேடுகள், சீரழிந்து வரும் உள்கட்டமைப்பு, கல்வியில் தனியார்மயமாக்கல் போன்ற பல்வேறு விவகாரங்களை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவில் கல்வி, அரசியல், நீதித்துறை, ஊடகம், வணிகத்துறை ஆகியவை சில குறிப்பிட்ட நபர்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டன. கேள்வி கேட்காதவர்களையே இந்த அதிகார அமைப்பு விரும்புகிறது என்று அவர் கூறினார்.

நாடு முழுவதும் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 1 லட்சம் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதில் 55 விழுக்காட்டுப் பள்ளிகள் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசத்தில் மூடப்பட்டுள்ளன. 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கல்விக்கு 4.6 விழுக்காடு நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது அது 2.6 விழுக்காடாகக் குறைந்துள்ளது. பிரதமர் மோடி, அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் அரசு கல்விக் கட்டமைப்பைச் சீரழித்துவிட்டனர் என்றார் அவர்.

10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன, 1 லட்சம் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதி தற்போதைய ஆட்சியில் 2.6 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுவிட்டது.
ராகுல்காந்தி

இந்நிகழ்ச்சியின்போது, ஓபிசி இடஒதுக்கீடு விவகாரம், தேர்வு வாரிய முறைகேடுகள், பழங்குடியின மாணவர் விடுதிப் பற்றாக்குறை குறித்து மாணவர்கள் தங்களின் ஆதங்கங்களை ராகுலிடம் நேரில் முறையிட்டனர்.

ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் உடனடியாகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ராகுலின் இந்த நிகழ்ச்சி ‘பொய்யின் குரல்’ என்று சாடிய அவர், எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் ராகுல் காந்தி வெற்று அரசியல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருவதாக அவர் பதிலடி கொடுத்தார்.

குறிப்புச் சொற்கள்
இந்தியாராகுல்மாணவர்கள்ஆலோசனை ஆசிரியர்குரல்கேள்விபாஜககாங்கிரஸ்