புதுடெல்லி: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் சமாஜ்வாடி கட்சி நடத்திய ரத யாத்திரையின்போது, பூக்களைத் தூவிச் சென்ற புல்டோசர் மோதியதில் 12 வயதுச் சிறுவன் உயிரிழந்தான்.
சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமையில் அந்தப் பேரணி நடைபெற்றது. அதில் பலியான சிறுவன் சௌரி சௌராவில் உள்ள ராஜ்தானி கிராமத்தைச் சேர்ந்த ஆர்யவர்தன் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளான்.
சிறுவனின் தந்தை ஓம்கார் சிங் உள்ளூர் பாரதிய ஜனதா கட்சித் தலைவராவார்.
கூடகாட் பகுதியில் பிற்பகல் 2 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
“அகிலேஷ் யாதவின் வாகன அணிவகுப்பு கடந்து சென்றபோது, என் மகளைப் பள்ளியிலிருந்து அழைத்துவருவதற்காக என் மகன் சாலையைக் கடந்தான். அப்போது, அகிலேஷ் யாதவ்மீது பின்னாலிருந்து பூக்களைத் தூவுவதற்காக அதிவேகமாக வந்த வாகனம் என் மகன்மீது மோதியது,” என்று ஓம்கார் சிங் கூறினார்.
வாகனம் மோதியதால் சாலைத் தடுப்பில் தூக்கி வீசப்பட்ட சிறுவனின் தலையின் பின்பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டு, அவன் உயிரிழந்தான்.
சமாஜ்வாடி கட்சி ஆதரவாளர்களின் பொறுப்பற்ற நடத்தையாலும் அலட்சியத்தாலுமே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக உத்தரப் பிரதேச பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆட்சியில் இல்லாதபோதே இவர்களின் செயல்பாடு இவ்வாறு இருந்தால், ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என அது கேள்வி எழுப்பியுள்ளது.
விபத்து சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
