மும்பை: மகாராஷ்டிராவின் சிராய் கிராமத்தில் சமய நிகழ்ச்சி ஒன்று திங்கட்கிழமை இரவு நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில், பா.ஜ.க. தலைவரான மகாராஷ்டிரா மீன்வளத்துறை அமைச்சர் நித்தேஷ் ரானே கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது, திடீரென ஒரு வெங்காய மாலையுடன் மேடைக்கு வந்த விவசாயி ஒருவர், அமைச்சருக்கு அந்த மாலையை அணிவித்தார். அதனை ஏற்க முதலில் மறுத்த அமைச்சர் பின்னர், அதை தன் கழுத்தில் போட அனுமதித்தார். பின்னர், அங்கிருந்த மைக்கைப் பிடித்துப் பேச முயன்ற விவசாயியை, அங்கிருந்த காவலர்கள் பிடித்துச் சென்றனர்.
இதுதொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 10 நாள்களாக வெங்காய விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் அங்குள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்துமாறும் அதற்கான 20% ஏற்றுமதி வரியை நீக்குமாறும் தேசியவாத காங்கிரஸ் தலைவரான துணை முதல்வர் அஜித் பவார், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடந்த 19ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.