தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாஜக வேட்பாளரை எதிர்த்து பாஜக எம்எல்ஏ மகன் போட்டி

1 mins read
8c5377b9-c677-47f5-94ac-648a7f8e6308
தன் மகன் ராமேஷ்வர் சௌதரியை (இடது) சுயேச்சை வேட்பாளராகக் களமிறக்கவுள்ள பாஜக எம்எல்ஏ பாபுலால் சௌதரி. - படம்: இந்திய ஊடகம்

ஆக்ரா: பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரை எதிர்த்து, அக்கட்சி எம்எல்ஏ ஒருவரின் மகனே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், ஃபதேபூர் சிக்ரி நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக சார்பில் போட்டியிட்டு வென்றார் பாபுலால் சௌதரி. ஆனால், 2019 தேர்தலில் மீண்டும் அத்தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை.

ஆயினும், கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஃபதேபூர் சிக்ரி தொகுதியில் அவர் போட்டியிட்டு வென்று எம்எல்ஏவானார்.

இந்நிலையில், இம்முறை ஃபதேபூர் சிக்ரி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் நடப்பு எம்.பி.யான ராஜ்குமார் சாகரே நிறுத்தப்பட்டுள்ளார்.

முன்னதாக, தன் மகன் ராமேஷ்வர் சௌதரிக்கு பாபுலால் வாய்ப்பு கேட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அவரது கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், தன் மகன் ராமேஷ்வரை ஃபதேபூர் சிக்ரி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக நிறுத்தியுள்ளார் பாபுலால்.

“என் மகனுக்காக நான் பரப்புரை செய்வேன். நாங்கள் பாஜகவிற்கு எதிரானவர்கள் அல்லர். ஆனால், சாகரை மீண்டும் நிறுத்தியிருப்பதை ஏற்க முடியாது,” என்று அவர் கூறினார்.

ஃபதேபூர் சிக்ரி தொகுதியில் ஜாட் இனத்தவர் பெரும்பான்மையினராக உள்ளனர். இந்நிலையில், ஜாட் இனத்தவரான ராமேஷ்வர் வாக்குகளைப் பிரித்து, பாஜகவிற்குச் சவால் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்