தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கெஜ்ரிவால்: குறுக்குவழியில் வெற்றிபெறத் துடிக்கிறது பாஜக

2 mins read
b0175a86-4dfd-49a0-a999-e5573f149201
டெல்லியில் தோல்வியைத் தழுவ நேரும் என்பது பாஜகவுக்கு நன்கு தெரியும் என டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் சாடியுள்ளார். - படம்: ஊடகம்

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பாரதிய ஜனதா கட்சி, வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குளறுபடியை ‘லோட்டஸ் ஆபரேஷன்’ என்று குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் நடக்கவிருக்கும் தேர்தலில் பெயர் பதிப்பதற்காக பாஜக கடந்த டிசம்பர் 15ஆம் தேதியில் இருந்து இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கெஜ்ரிவால், “டெல்லியில் தோல்வியை பாஜக ஏற்கெனவே ஒத்துக்கொண்டுள்ளது. ஏனெனில், அவர்களிடம் டெல்லிக்கான முதல்வர் வேட்பாளர் முகம் இன்னமும் கிடைக்கவில்லை. அவ்வாறு அந்தப் பதவிக்காகத் தேர்தலில் நிறுத்தக்கூடிய அளவுக்கு அவர்களிடம் ஒருவரும் இல்லை. நம்பகமான வேட்பாளர்கள் ஒருவரும் இல்லை. அவர்களிடம் எவ்விதத் தொலைநோக்குப் பார்வையும் இல்லை. அதனால், தேர்தலில் எப்படியும் தோல்விதான் மிஞ்சும் என்பதை அவர்கள் அறிவார்கள்.

“புதுடெல்லியில் எனது சட்டமன்றத் தொகுதியில், டிசம்பர் 15 முதல் ‘ஆபரேஷன் லோட்டஸ்’ செயலில் உள்ளது. இந்த 15 நாள்களில் 5,000 வாக்காளர்களை நீக்குவதற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், 7,500 வாக்காளர்களைச் சேர்க்க விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 12 விழுக்காட்டு வாக்காளர்களை நீக்கி முறைகேடுகள் நடைபெற்றுள்ளன,” என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

ஆனால், டெல்லி தேர்தலில் எப்பாடுபட்டாவது வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் நேர்மையற்ற வழியில் தந்திரங்களைக் கையாளத் தொடங்கியுள்ளது பாஜக. அதனால்தான் இப்போது வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளைச் செய்யத் தொடங்கியுள்ளது என்றார் கெஜ்ரிவால்.

ஷாதாரா தொகுதியில் மட்டும் 11,800 வாக்காளர்களை நீக்க பாஜக விண்ணப்பித்தது. ஆனால் இந்திய தேர்தல் ஆணையத்தின் (இசிஐ) தலையீட்டிற்குப் பிறகு அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டதாகவும் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்