பாஜகவுக்கு ரூ.2,244 கோடி நன்கொடை, காங்கிரசுக்கு ரூ.289 கோடி

பாஜகவுக்கு ரூ.2,244 கோடி நன்கொடை, காங்கிரசுக்கு ரூ.289 கோடி

2 mins read
1377fc45-f871-4ec8-90fd-31a7e998c412
பிரதமர் நரேந்திர மோடி (இடது), எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரசின் ராகுல் காந்தி. - கோப்புப் படங்கள்: இந்துஸ்தான் டைம்ஸ் / இணையம்

புதுடெல்லி: அரசியல் கட்சிகள், தனிநபர்கள், அறக்கட்டளை அமைப்புகள், நிறுவனங்களிடமிருந்து பெற்ற நன்கொடை விவரங்கள் இந்தியத் தேர்தல் ஆணைய இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி கடந்த 2023-2024ஆம் ஆண்டில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்குத் (பாஜக) தனிநபர்கள், அறக்கட்டளை அமைப்புகள், நிறுவனங்களிடமிருந்து சுமார் ரூ.2,244 கோடி (358.23 மில்லியன் வெள்ளி) கிடைத்துள்ளது. முந்தைய ஆண்டை விட 2023-2024ல் பாஜகவுக்குக் கிடைத்த நன்கொடை 212 விழுக்காடு அதிகரித்தது.

அதேவேளை, 2023-24ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.288.9 கோடி (46.12 மில்லியன் வெள்ளி) நன்கொடை கிடைத்தது. முந்தைய ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.79.9 கோடி கிடைத்திருந்தது.

ப்ரூடென்ட் எலக்டோரல் டிரஸ்ட் (Prudent Electoral Trust) அறநிறுவனத்திடமிருந்து பாஜக ரூ.723.6 கோடி (115.52 மில்லியன் வெள்ளி) மதிப்பிலான நன்கொடையைப் பெற்றுள்ளது. அதே நிறுவனம், காங்கிரசுக்கு ரூ.156.4 கோடி (24.97 மில்லியன் வெள்ளி) வழங்கியுள்ளது.

அதன் மூலம் 2023-2024ஆம் ஆண்டில் பாஜகவுக்குக் கிடைத்த நன்கொடையில் மூன்றில் ஒரு பங்கும், காங்கிரசின் நன்கொடையில் பாதிக்கும் மேலானது ப்ரூடென்ட்டிடமிருந்து பெறப்பட்டது.

2022-2023ஆம் ஆண்டில் ப்ரூடென்டுக்கு நன்கொடை அளித்தோரில் மேகா என்க் அன்ட் இன்ப்ரா லிமிடெட் (MEIL), சீரம் இன்ஸ்டிடியூட், பார்த்தி ஏர்டெல் (Bharti Airtel) உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கும். பாஜக, காங்கிரசால் பெற்றதாக அறிவிக்கப்பட்ட மொத்த நன்கொடையில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்டப் பற்றுச்சீட்டுகள் இல்லை. இந்த விவரத்தை அரசியல் கட்சிகள் தங்கள் வருடாந்தர தணிக்கை அறிக்கைகளில் மட்டுமே அறிவிக்கவேண்டும் எனக் கூறப்படுகிறது.

அதேநேரம் சில மாநிலக் கட்சிகள் தங்கள் 2023-2024 பங்களிப்பு அறிக்கைகளில் தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்த தொகையின் பற்றுச்சீட்டுகளைத் தானாக முன்வந்து அறிவித்துள்ளன என்று மாலைமலர் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்
இந்தியாஅரசியல்பாஜககாங்கிரஸ்