புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக போட்டியிடும் ஒன்பது தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பாஜக மத்திய தேர்தல் குழு அக்கட்சியின் தேசியத்தலைவர் நிதின் விபின் தலைமையில் கூடியது.
அக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பங்கேற்றனர்.
அதில் புதுச்சேரி சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான அக்கட்சி வேட்பாளர்களின் பட்டியலைத் தலைமைப் பொறுப்பாளரும் தேசிய பொதுச்செயலருமான அருண்சிங் வெளியிட்டார்.
இம்முறை, மொத்தம் 10 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாகப் பாஜக அறிவித்திருந்த நிலையில் தற்போது ஒன்பது தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
அதில் ஊசுடுத் தொகுதியில் வென்ற பாஜக முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏவுமான சாய் சரவணன் குமாருக்கு வாய்ப்புத் தரப்படவில்லை.
அதேபோல் என்.ஆர்.காங்கிரசில் அமைச்சராக உள்ள லட்சுமி நாராயணன் போட்டியிட்டு வென்ற ராஜ்பவன் தொகுதி பாஜகவுக்கு தரப்பட்டுள்ளதால் அவருக்கு வாய்ப்பு தரப்படாது. அதேபோல் மங்கலம் தொகுதியில் அமைச்சர் தேனீ ஜெயக்குமாருக்கு வாய்ப்புத் தராமல் அம்மாநில முதல்வர் ரங்கசாமி போட்டியிடவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, வேட்பு மனு தாக்கலுக்கு ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், என்டிஏ கூட்டணி இறுதி செய்யப்பட்டு பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ள சூழலில், இண்டியா கூட்டணியில் இழுபறி நீடிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக, காங்கிரஸ் இடையே அதிக தொகுதி, தலைமை யார் என்பதில் தொடரும் பிரச்சினையே இந்த இழுபறிக்குக் காரணம்.
இரு கட்சிகளின் தலைமையும் அதில் தலையிட்டு இண்டியா கூட்டணிப் பங்கீடு விரைவில் முடியும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.

