புதுடெல்லி: பாரதிய ஜனதாவும் ஆர்எஸ்எஸ் இயக்கமும் இணைந்து அம்பேத்கரையும் அவர் இயற்றிய அரசியலமைப்புச் சட்டத்தையும் அவமதிக்கின்றன என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கூறியுள்ளார்.
‘ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் சம்விதான்’ என்ற பெயரிலான பேரணியில் ராகுல் காந்தி கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், பெரும் செல்வந்தர்களுக்காக மட்டுமே பாஜக வேலை செய்து வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த செல்வமும் ஒருசில முதலாளிகளிடம் ஒப்படைக்கப்படுகின்றன. அதனால் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் ஏழைகள் மீண்டும் அடிமைப்படுத்தப் படுகின்றனர்.
சுதந்திரத்திற்கு முந்தைய சூழ்நிலையில் நாடு எப்படியிருந்ததோ அதே நிலையில் இருக்க வேண்டும் என்றுதான் பாஜகவும் ஆர்எஸ்எஸ் இயக்கமும் விரும்புகின்றன. உரிமைகள் யாவும் செல்வந்தர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. ஏழைகள் ஒதுக்கப்படுகின்றனர் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
அம்பேத்கரையும் அவர் வடிவமைத்த அரசியலமைப்புச் சட்டத்தையும் மாற்றுவதற்கு பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் கூட்டாக முயற்சி செய்து வருவதாக ராகுல் குற்றம் சாட்டினார்.
அவ்வாறு, நமது அரசியலமைப்பு மாற்றப்பட்டால் நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு ஆதரவாக எதுவும் மிச்சமிருக்காது என்று ராகுல் பேரணியில் கூறினார்.