புதுடெல்லி: அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மொத்தம் 529.38 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ள கணக்கு அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இதில் பாதிக்கும் மேற்பட்ட தொகை, அதாவது 286 கோடி ரூபாய், மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் செலவிடப்பட்டுள்ளது.
அசாம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களுக்கான பாஜகவின் செலவுப் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
செலவு விவரங்கள்
தேர்தல் காலத்தில் பெற்ற 1,494 கோடி ரூபாய் நிதியையும் சேர்த்து, தேர்தல் சுற்றின் முடிவில் கட்சியின் வங்கி மற்றும் ரொக்க இருப்பாக 7,689.06 கோடி ரூபாய் எஞ்சியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக தனது பிரசாரத்துக்காக 217.16 கோடி ரூபாயும் வேட்பாளர்களுக்கான செலவாக 69.83 கோடி ரூபாயும் (இதில் வேட்பாளர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்ட 58.80 கோடி ரூபாயும் அடங்கும்) செலவிட்டுள்ளது.
பிற மாநிலங்களில் பாஜக செய்த செலவு விவரம்
பிற மாநிலங்களைப் பொறுத்தவரை, அசாம் மாநிலத்தில் 96.26 கோடி ரூபாயும் கேரளாவில் 82.67 கோடி ரூபாயும் தமிழ்நாட்டில் 51.56 கோடி ரூபாயும் பாஜக செலவிட்டுள்ளது.
அத்துடன், யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அக்கட்சி 11.89 கோடி ரூபாயைத் தேர்தல் பிரசாரத்திற்காகச் செலவு செய்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் தனிநபர் வேட்பாளர் ஒருவருக்குச் செலவு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்துக்காக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் செலவிடலாம்.
இருப்பினும், ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் கட்சிகள் தங்களின் பயணம், பொதுக்கூட்டங்கள், விளம்பரங்கள், பிரசாரப் பொருள்கள் தொடர்பான செலவுக் கணக்குகளைத் தேர்தல் ஆணையத்திடம் துல்லியமாகச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம்.
