புதுடெல்லி: ஜெர்மனிக்குச் சென்றுள்ள இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பெர்லின் நகரில் ஹெர்டி கல்விக் கழகத்தில் உரையாற்றினார். அந்த உரையில், “பாரதிய ஜனதா கட்சி இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை முழுமையாக அப்புறப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.
பெர்லினில் காங்கிரசின் மூத்த தலைவருமான ராகுல் காந்தியின் உரையடங்கிய காணொளியை, காங்கிரஸ் கட்சி அதன் அதிகாரபூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவேற்றியுள்ளது.
“இந்தியாவின் மாபெரும் ஜனநாயகம் உலகிற்கே ஒரு சொத்து எனலாம். அவ்வாறிருக்க இந்திய ஜனநாயக அமைப்பு மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இது அனைத்துலக ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும்.
“இந்திய அரசமைப்பை முற்றிலுமாக அப்புறப்படுத்தி, மாநிலங்களுக்கு இடையேயான சமத்துவத்தை அழிக்க நினைக்கிறது பாஜக. மொழிகள், மதங்களுக்கு இடையேயான சமத்துவத்தை அழிப்பதன் மூலம் இந்திய அரசமைப்பின் மையப் புள்ளியை சிதைக்க நினைக்கிறது,” என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.
ஜனநாயக அமைப்பு மீது தாக்குதல் நடைபெறும்போது, அதை எதிர்த்துப்போராடுவதற்கு எதிர்க்கட்சிகள் சரியான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.
அந்த வகையில், மாபெரும் ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்துவோரை எதிர்கொள்வதற்குத் தகுந்த வழிகளை நாங்கள் உருவாக்குவோம்.
எதிர்க்கட்சிகளின் இந்த உத்தி நிச்சயம் வெற்றி பெறும். நாங்கள் பாஜக என்கிற கட்சிக்கு எதிராகப் போராடவில்லை; நாங்கள் இந்தியாவின் கட்டமைப்பை கைப்பற்றும் அவர்களின் போக்கை மட்டுமே எதிர்க்கிறோம்.
அடிப்படையில், இந்தியத் தேர்தல் நடைமுறைகளில் சிக்கல் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், இந்தியாவில் அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) உள்ளிட்டவற்றை பாஜக ஆயுதமாகப் பயன்படுத்துவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி பேசியுள்ளார்.
இரண்டாவதாக, அரசு கட்டமைப்பு ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறுகிறோம். அரசு கட்டமைப்புகளை ஆயுதமாக்கும் முயற்சி நடக்கிறது. இதனால், அரசு கட்டமைப்புகள் என்ன மாதிரியான பணிகளைச் செய்ய வேண்டுமோ அவைகளால் அதைச் செய்ய இயலவில்லை.
பாஜக கண்டனம்
இந்த நிலையில், ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி “நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவராக இருக்கிறார்,” என்று பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஸாத் பூனாவாலா செவ்வாய்க்கிழமை விமர்சித்துள்ளார்.
வெளிநாட்டு மண்ணில் இந்தியாவுக்கு எதிராக நஞ்சைக் கக்கும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும், அவதூறுகளையும் பரப்பும் இல்ஹான் ஓமர், சலில் ஷெட்டி போன்றோரைச் சந்திப்பதுதான் அது.” எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நிறைவடைவதற்கு முன்னதாகவே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜெர்மனிக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டதற்கு பாஜகவினர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

