இரு மனைவிகளுடன் வாழும் 12 எம்எல்ஏக்களின் பட்டியலை வெளியிட பாஜக வலியுறுத்து

இரு மனைவிகளுடன் வாழும் 12 எம்எல்ஏக்களின் பட்டியலை வெளியிட பாஜக வலியுறுத்து

படம்: டெலிகிராப் இந்தியா

27 Sep 2026 - 3:21 pm

1 mins read

பெங்களூரு: பெங்களூருக்கு வரும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு மனைவிகள் இருப்பதாகக் கர்நாடகத் தலைவர் டி.கே.சிவக்குமாரின் பேச்சு அம்மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

கர்நாடகச் சட்டசபையில் வறட்சி நிலைமை, பெங்களூரு நகரின் கட்டமைப்பு நெருக்கடிகள் தொடர்பான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

வெளியூரிலிருந்து பெங்களூரு நகருக்கு வருகை தரும் சட்டமன்ற உறுப்பினர்களில் பன்னிரண்டு பேருக்கு இரண்டு மனைவிகள் இருப்பதாக அவர் அதிரடியாகத் தெரிவித்தார்.

அவர்கள் இரண்டு குடும்பங்களை நடத்தி வருவதாகவும் தேவைப்பட்டால் அவர்களின் பெயர் பட்டியலைத் தம்மால் தர முடியும் என்றும் அவர் கூறினார்.

சட்டசபையில் மக்கள் பிரதிநிதிகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசிய இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா, அவையின் கண்ணியத்தை டி.கே.சிவக்குமார் குலைத்துவிட்டதாகக் குற்றம்சாட்டினார்.

வெளியூரிலிருந்து வரும் அனைத்து உறுப்பினர்களின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக இப்பேச்சு அமைந்துள்ளதாகக் கூறிய அவர், பெயர்களை உடனடியாக வெளியிடுமாறு வலியுறுத்தினார்.

அவையின் கண்ணியத்தைக் காக்க டி.கே.சிவக்குமார் மன்னிப்புக் கேட்க வேண்டும் அல்லது பட்டியலை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

இப்பிரச்சினை தொடர்பாகச் சட்டமன்ற உறுப்பினர்களிடையேயும் பொதுமக்கள் மத்தியிலும் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்