ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாட்டு கட்சியின் ஆட்சி நடைபெறும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சார்பில் 100 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக, ஸ்ரீநகரில் நடந்த கூட்டத்தில் பேசிய ஒமர் அப்துல்லா, தமது கட்சியின் ஆட்சியை கவிழ்க்க பாஜக தொடர்ந்து முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
மேலும், தமது கட்சி சட்டமன்ற உறுப்பினர் (எம்எல்ஏ) ஒருவரை நேரில் அணுகிய பாஜக நிர்வாகி, 30 கோடி ரூபாய் பணமும் அமைச்சர் பதவியும் தருவதாக பேரம் பேசியதாகவும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.
அந்தக் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ள பாஜக, அது முற்றிலும் பொய்யான, கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயல் எனக் கூறியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநில பாஜக தலைவர் சத்பால் சர்மாவின் அறிவுறுத்தலின் பேரில் ஒமர் அப்துல்லாவுக்கு தற்போது சட்டபூர்வமாகக் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில், இந்த அவதூறு கருத்துகளை எழுத்துபூர்வமாக அவர் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் ஏழு நாள்களுக்குள் பொது மன்னிப்பு கோர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறும் பட்சத்தில், குடிமை, குற்றவியல் சட்டங்களின்கீழ் 100 கோடி ரூபாய் கோரி அவதூறு வழக்கு தொடரப்படும் எனப் பாஜக கடுமையாக எச்சரித்துள்ளது.

