புதுடெல்லி: தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருவதால் மத்தியில் பாஜக தொடர்ந்து 30 ஆண்டுகள் ஆட்சியில் நீடிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.
‘டைம்ஸ்நவ்’ தொலைக்காட்சியிடம் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) இரவு அவர் பேசினார்.
ஒரு கட்சியின் வெற்றி என்பது அதன் கடின உழைப்பைப் பொறுத்தது என்று அப்போது அவர் கூறினார்.
“நீங்கள் உங்களுக்காக உழைக்காமல், நாட்டுக்காக உழைத்தால் வெற்றி நிச்சயம்,” என்றும் அவர் தமது நேர்காணலில் குறிப்பிட்டார்.
“பாஜக தேசியத் தலைவராக நான் பொறுப்பேற்று இருந்தபோது மத்தியில் அடுத்த 30 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் என்று சொன்னேன். தற்போது அதில் 10 ஆண்டுகள் மட்டுமே கடந்து உள்ளன.
“எனவே, குறைந்தபட்சம் இன்னும் இருபது ஆண்டுகளுக்காவது மத்தியில் பாஜக ஆட்சி நீடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
“ஒரு கட்சி நல்லமுறையில் செயல்பட்டால் மட்டுமே பொதுமக்களின் ஆதரவைப் பெற்று வெற்றிக்கனி பறிக்க இயலும். மோசமாகக் கட்சி நடத்துவோருக்கு இதுபோன்ற நம்பிக்கை இருக்காது,” என்றார் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா.
தமிழ்நாட்டு அரசியல் நிலவரம் குறித்துப் பேசிய அவர், “தமது மகன் உதயநிதியை வாரிசாக முதல்வர் ஸ்டாலின் முன்னிறுத்துவதன் மூலம் வாரிசு அரசியலை அவர் ஊக்குவிக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
“தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக அரசு ஊழல் மட்டுமே செய்துகொண்டிருக்கிறது. அதன் காரணமாக அந்த மாநில இளைஞர்கள் பலர் வெளியேறி வருகின்றனர். தொழில் நிறுவனங்களும் அங்கிருந்து வெளியேறுகின்றன.
“தேர்தலுக்காக மட்டுமே தற்போது தொகுதி மறுவரையறை பிரச்சினையை அவர்கள் கிளப்புகின்றனர்.
“ஐந்து ஆண்டுகளாக அவர்கள் (திமுக)ஊழலில் ஈடுபட்டனர். இப்போது திடீரென விழித்துக் கொண்டு உள்ளனர்.
“அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைப்பது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. சரியான நேரம் வரும்போது அதுபற்றி அறிவிப்போம்,” என்று அமித்ஷா கூறியுள்ளார்.