தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹரியானாவில் பாஜக ‘ஹாட்ரிக்’ வெற்றி; காஷ்மீரில் இண்டியா கூட்டணி ஆட்சி

2 mins read
de1585a6-0ee3-418f-990c-1c47f2a1238e
ஸ்ரீநகரில் வெற்றிக் கொண்டாட்டத்தில் இறங்கிய இண்டியா கூட்டணிக் கட்சியினர். - படம்: இபிஏ
multi-img1 of 2

சண்டிகர்: சரிவைச் சந்திக்கும் எனக் கருத்துக்கணிப்புகள் கூறிய நிலையில், அவற்றைப் பொய்யாக்கி, ஹரியானா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி, தொடர்ந்து மூன்றாம் முறையாக பாரதிய ஜனதா கட்சி அங்குச் சாதித்துள்ளது.

ஹரியானாவில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 5) ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டன.

அதில், சிங்கப்பூர் நேரப்படி இரவு 8.30 மணியளவில், பாஜக 41 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தது; ஏழு தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது.

பெரும்பான்மைக்கு 46 இடங்கள் போதும் என்ற நிலையில், அக்கட்சி மொத்தம் 48 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் அல்லது முன்னிலையில் இருந்ததால் இனி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் ஹரியானாவில் பாஜக ஆட்சிதான் என்பது உறுதியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சி 33 தொகுதிகளில் வென்று, நான்கு தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. இந்திய தேசிய லோக் தளக் கட்சி இரண்டு இடங்களிலும் சுயேச்சை வேட்பாளர்கள் மூன்று இடங்களிலும் வெற்றிபெற்றனர்.

இந்திய தேசிய லோக் தளம் - பகுஜன் சமாஜ் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான அபய் சவுதாலா, எல்லனாபாத் தொகுதியில் தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரைவிடப் பின்தங்கியிருந்தார். அதுபோல் முன்னாள் துணை முதல்வரும் ஜனநாயக ஜனதா கட்சியைச் சேர்ந்தவருமான துஷ்யந்த் சவுதாலாவும் பின்தங்கி, ஆறாமிடத்தில் இருந்தார்.

காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றிபெற்றார்.

இதனிடையே, பத்தாண்டுகளுக்குப் பிறகு சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாட்டுக் கட்சி தலைமையிலான இண்டியா கூட்டணி வாகைசூடியது. தேசிய மாநாட்டுக் கட்சி 42 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி ஆறு தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும் வென்றன.

மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 49 தொகுதிகளை அக்கூட்டணி கைப்பற்றி, ஆட்சியில் அமரவிருக்கிறது. அங்கு 62 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 29 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

இதனையடுத்து, ஜம்மு - காஷ்மீரின் அடுத்த முதல்வராக தேசிய மாநாட்டுக்கட்சியின் துணைத் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா தேர்வுசெய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை அவர் இரண்டு தொகுதிகளில் களமிறங்கி, இரண்டிலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்