பிரியங்கா காந்தி தேர்தல் வெற்றியை எதிர்த்து பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் வழக்கு

2 mins read
b228f610-6b32-497f-91db-4985419c21d4
பிரியங்கா காந்தி (இடது). நவ்யா ஹரிதாஸ். - படங்கள்: இந்திய ஊடகம்

திருவனந்தபுரம்: வயநாடு தொகுதிக்குப் பிரியங்கா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கேரளாவின் வயநாடு தொகுதிக்கு கடந்த நவம்பர் 13ஆம் தேதி நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட நவ்யா ஹரிதாஸ் 5,12,399 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இந்நிலையில், பிரியங்கா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து நவ்யா ஹரிதாஸ் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், “பிரியங்கா காந்தி வதேரா தனது வேட்பு மனுவில் ​​தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் சொந்தமான பல்வேறு சொத்துகள் தொடர்பான முக்கிய தகவல்களை மறைத்துவிட்டார்.

“தவறான தகவல்களை அளித்ததன் மூலம், பிரியங்கா காந்தி வதேரா வாக்காளர்களைத் தவறாக வழிநடத்தியுள்ளார். உண்மைத் தகவல்களை வாக்காளர்கள் தெரிந்துகொள்ள முடியாதவாறு மறைத்துள்ளார். இது வாக்காளர்களின் விருப்பத்தைப் பாதிக்கும் நோக்கம் கொண்டது.

“1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, பிரியங்கா காந்தி வதேரா பல சந்தர்ப்பங்களில் வாக்காளர்களிடம் தேவையற்ற செல்வாக்கைச் செலுத்தி உள்ளார், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

“இதன்மூலம் பிரியங்கா காந்தி வதேராவின் வேட்பு மனு, தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் விதிமுறைகளின் கீழ் உள்ள ஆணைகளை மீறியதாகிறது. எனவே, அவரது தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும்,” என தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் நவ்யா ஹரிதாஸ் தரப்பில் வழக்கறிஞர் ஹரி குமார் நாயர் முன்னிலையாவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்