விமானத்தில் புகைபிடித்த இந்தியப் பெண்

விமானத்தில் புகைபிடித்த இந்தியப் பெண்

1 mins read
3eac3d11-3b61-4039-9962-062c033ace5a
விமானத்தினுள் புகைபிடித்ததற்காக ஐஸ்வர்யா ராய் என்ற பெண் கைதுசெய்யப்பட்டார். படம்: டுவிட்டர்/ஜெட் அரீனா -

மும்பை: விமானம் பறந்துகொண்டிருந்தபோது புகைபிடித்ததற்காக இந்தியப் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இம்மாதம் 18ஆம் தேதி மும்பையில் இருந்து ராஞ்சிக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில் அப்பெண் புகைபிடித்ததாகக் கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா ராய் என்ற அந்த வலைப்பதிவாளர் கழிவறைக்குள் புகைபிடித்ததாகவும் அதனைத் தொடர்ந்து விமானத்தில் அபாய ஒலி ஒலித்ததாகவும் 'ஜெட் அரீனா' டுவிட்டர் செய்தி தெரிவிக்கிறது.

அதனையடுத்து, ஐஸ்வர்யா ராயை விமானச் சிப்பந்திகளில் ஒருவர் கையும் களவுமாகப் பிடித்தார்.

இதுகுறித்து அறிந்த டுவிட்டர்வாசிகள், அப்பெண்ணைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பாதுகாப்புச் சோதனையைக் கடந்து அவரால் எப்படி சிகரெட்டையும் பற்றவைப்பானையும் விமானத்திற்குள் எடுத்துச் செல்ல முடிந்தது என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்னொருவர், "இந்தியாவில் படிக்காதவர்களைவிட படித்தவர்கள்தான் மோசமாக நடந்துகொள்கின்றனர்," என்று குறிப்பிட்டுள்ளார்.