பாட்னா: பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் கங்கை நதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 சிறார் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
திருவிழாக் கொண்டாட்டங்களுக்காகச் செவ்வாய்க்கிழமை இரவு (அக்டோபர் 13), அப்பகுதி மக்கள் சிறிய படகொன்றில் கங்கை நதியைக் கடக்க முயன்றபோது விபத்து நிகழ்ந்தது. அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதே விபத்துக்கு முதன்மைக் காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும், விபத்துக்குள்ளான படகு மிகச் சிறியதாகவும் சரியாகப் பராமரிக்கப்படால் இருந்ததாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
இருள் சூழ்ந்த நிலையில் படகு தலைகீழாகக் கவிழ்ந்ததும் அலறல் சத்தம் கேட்டு உள்ளூர் மக்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கைப்பேசி, விளக்குகள் உதவியுடன் கிராம மக்கள் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். இருப்பினும், மூன்று சிறுவர்களை மட்டுமே காப்பாற்ற முடிந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மீட்புப் படையினரின் உதவியுடன் 13 சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும், உயிருடன் மீட்கப்பட்ட ஆறு பேரில் இரண்டு சிறுவர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாய் இருப்பதாக உள்ளூர் சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியையும் அவர் அறிவித்தார்.
