பணத்திற்காகக் கடத்தப்பட்ட சிறுவனின் உடல் எரிந்த நிலையில் கண்டுபிடிப்பு

2 mins read
07264470-a9f4-4fc3-8b5c-ffd298a1d559
கடத்திக் கொல்லப்பட்ட நிஷ்சித், 13. - படங்கள்: இந்திய ஊடகம்

பெங்களூரு: பணத்திற்காகக் கடத்தப்பட்ட 13 வயதுச் சிறுவனின் உடல் ஆளரவமற்ற பகுதியில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவம் இந்தியாவின் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் நிகழ்ந்துள்ளது.

நிஷ்சித் என்ற அச்சிறுவன், அங்குள்ள கிறிஸ்து பள்ளியில் எட்டாம் வகுப்பில் பயின்றுவந்தான். அவன் கடந்த புதன்கிழமை (ஜூலை 30) துணைப்பாட வகுப்பிற்குச் சென்றபோது மாலை 5 மணியளவில் கடத்தப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

அவனுடைய தந்தை அச்சித் தனியார் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியாகப் பணிபுரிந்து வருகிறார்.

இரவு 7.30 மணிவரை நிஷ்சித் வீட்டிற்குத் திரும்பாததை அடுத்து, அவனின் பெற்றோர் துணைப்பாட ஆசிரியரைத் தொடர்புகொண்டனர். உரிய நேரத்தில் அவன் கிளம்பிவிட்டதாக அந்த ஆசிரியர் தெரிவித்தார்.

அதனையடுத்து, நிஷ்சித்தின் பெற்றோர் அவனைத் தேடியபோது, அங்குள்ள அரக்கெரெ குடும்பப் பூங்காவிற்கு அருகே அவனது மிதிவண்டி கிடந்ததைக் கண்டனர்.

சற்று நேரத்தில் ரூ.5 லட்சம் (S$7,540) கேட்டு அவர்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பும் வந்தது. அதனைத் தொடர்ந்து, அச்சித் காவல்துறையில் புகாரளித்தார்.

தொலைபேசி வழியாகப் பணம் கேட்டு மிரட்டியவரின் இருப்பிடத்தைக் கண்டறிந்து, காவல்துறை தேடுதலில் இறங்கியது. இந்நிலையில், மறுநாள் வியாழக்கிழமை எரிந்த நிலையில் நிஷ்சித்தின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகப் பேர்வழிகள் இருவரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது. குருமூர்த்தி, கோபால் கிருஷ்ணா என்ற அவ்விருவரும் காவல்துறையினரைத் தாக்கிவிட்டுத் தப்பிக்க முயன்றபோது அவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

அதில், குருமூர்த்தியின் இரு கால்களிலும் கோபால் கிருஷ்ணாவின் ஒரு காலிலும் குண்டு பாய்ந்தது. நிஷ்சித்தின் வீட்டில் குருமூர்த்தி பகுதிநேர ஓட்டுநராகப் பணிபுரிந்ததாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்