ஐதராபாத்: தெலுங்கானாவில் விஞ்ஞானி ஒருவரின் மகள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கானாவில் உள்ள குடியிருப்புப் பகுதியிலிருந்து காணாமல்போன ஐந்து வயதுச் சிறுமி, சில மணி நேரங்களுக்குப் பிறகு கிளப்ஹவுஸ் அடித்தளத்தில் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கிடந்தார்.
இச்சிறுமி, வேளாண் விஞ்ஞானி ஒருவரின் மகள். கவ்கூரில் உள்ள ஒரு குடியிருப்பில் தனது தந்தையுடன் சிறுமி வசித்து வந்த நிலையில் சனிக்கிழமையன்று காணாமல் போனார்.
புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.
அப்போது, வில்லா குடியிருப்பு வளாகத்தின் கிளப்ஹவுஸ் அடித்தளத்தில் சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
விக்ரம் என்ற பாதுகாவலர் இந்த வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர், அச்சிறுமியைக் கடத்திப் படுகொலை செய்துவிட்டு, சிறுமியை விடுவிக்க 20 லட்சம் ரூபாய் கேட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவத்திற்கு முன்னதாக அந்தப் பாதுகாவலர் சிறுமியுடன் இருக்கும் காட்சிகள் கண்காணிப்புப் படக்கருவியில் பதிவாகியுள்ளன.
தலைமறைவாக இருக்கும் பாதுகாவலரைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் காவல்துறையினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
சிறுமி சனிக்கிழமை காணாமல் போன நிலையில், இரவு 9 மணியளவில் அவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவத்திற்கு முந்தைய இரண்டு நாள்களாகச் சந்தேக நபர் அப்பகுதியில் நடமாடி வந்தாரா என்பது குறித்தும் புலனாய்வாளர்கள் விசாரித்து வருகின்றனர்.
சம்பவத்திற்குப் பிறகு சந்தேக நபர் செகந்தராபாத் ரயில் நிலையத்திற்குச் சென்றிருக்கலாம் என்பதை அவருடைய கைப்பேசியின் இருப்பிடத் தரவுகள் காட்டுவதாகக் கூறப்படுகிறது. அவரது நகர்வுகளைக் கண்டறியவும், சிறுமிக்கு என்ன நேர்ந்தது என்பதை உறுதிப்படுத்தவும் மின்னிலக்க ஆதாரங்களை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
