புதுடெல்லி: நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரின் மூன்றாவது நாளான திங்கட்கிழமை காலை 11 மணிக்கு மக்களவை கூடியது. அப்போது “கும்பமேளா சம்பவம் குறித்து பதில் சொல்லுங்கள்” என்று எதிர்க்கட்சிகள் முழங்கினர்.
கடந்த ஜனவரி 29ஆம் தேதி கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால், அந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். எனவே, நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் பட்டியலை அதிகாரிகள் வெளியிட வேண்டும். அத்துடன் இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே, நாடாளுமன்ற நடவடிக்கைகளைச் சீர்குலைக்க வேண்டாம் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார்.
கேள்வி நேரத்தின் போது பேசிய மக்களவை சபாநாயகர், “இந்திய மக்கள் உங்களை முழக்கங்கள் எழுப்புவதற்காகவும், அவை நடவடிக்கைகளைத் தொந்தரவு செய்வதற்காகவும் தேர்ந்தெடுத்து அனுப்பினார்களா?” என்று கேள்வி எழுப்பி, எதிர்க்கட்சி உறுப்பினர்களை கடுமையாகச் சாடினார்.
கும்பமேளாவின் தவறான நிர்வாகம், அரசியலமைப்பு மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரை அவமதிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் முழங்கினர்.
முன்னதாக, ஜனவரி 31ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற நிதிநிலைக் கூட்டத்தொடரின் முதல் நாளில் இரு அவைகளின் கூட்ட நேரத்தில் குடியரசுத்தலைவர் உரையாற்றினார். இரண்டாவது நாளான பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் மத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து மூன்றாவது நாள் கூட்டம் திங்கட்கிழமை தொடங்கியது.
இதில் குடியரசுத்தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தது. நாடாளுமன்ற நிதிநிலைக் கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடக்கிறது. அதற்கு பின்பு இரண்டாவது அமர்வு மார்ச் 10ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ம் தேதி வரை நடக்க இருக்கிறது.