புதுடெல்லி: இந்தி நடிகர் அனில் கபூரின் தனிமனித உரிமைகள், தவறாகப் பயன்படுத்தப்படும் எவ்வித உத்தேச செயற்கை நுண்ணறிவுக்கும் எதிராகப் பாதுகாக்கப்படும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
2008ஆம் ஆண்டு ஆஸ்கார் விருது பெற்ற ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ உள்ளிட்ட பல புகழ்பெற்ற படங்களில் நடித்திருக்கும் திரு அனில், தமது தனிமனித உரிமைகளை மீறியதற்காக 16 பேருக்கு எதிராக வழக்கு தொடுத்திருந்தார்.
திரு கபூரின் தனிமனித உரிமைகளில் அவரது பெயர், சாயல், தோற்றம், குரல் ஆகியவை அடங்கும்.
வர்த்தகக் காரணங்களுக்காகவும் சமூக ஊடகத் தளங்களிலும் திரு கபூரின் தனிமனித உரிமைகளைப் பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அத்துடன், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி திரு கபூரின் தோற்றத்தை உருவாக்குவதற்கும், லாபம் ஈட்டுவதற்காக அவரது தோற்றத்தைப் பயன்படுத்துவதற்கும் நீதிபதி பிரதீபா சிங் தடை விதித்ததாக இந்திய நாளேடான ‘பிஸ்னஸ் ஸ்டாண்டர்ட்’ தெரிவித்தது.
அத்தகைய செயல்கள் திரு கபூரின் உரிமைகளை மீறுவதாக உள்ளன என்று நீதிபதி கூறியதாய் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

