தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருமணப் பரிசுக்குள் வெடிபொருளை மறைத்து வைத்த முன்னாள் காதலன்; மணமகன் பலி

2 mins read
30cca147-89a3-419d-b819-dda42cf9f25b
படம்: Pixabay -

இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்தின் கபிர்தாம் மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை திருமண வீடு ஒன்றில் வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டதில் மணமகனும் அவரது சகோதரரும் உயிரிழந்தனர்.

மேலும் நால்வர் பலத்த காயமடைந்தனர்.

உயிரிழந்த மணமகனின் வயது 22. அவரது சகோதரருக்கு 30 வயது.

திருமணப் பரிசாகத் தரப்பட்ட 'ஹோம் தியேட்டர்' எனப்படும் வீட்டில் திரைப்படம் பார்க்க உதவும் ஒலிக் கருவிகளின் தொகுப்பில் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்ததாகக் காவல்துறை கூறியது.

மணமகளின் முன்னாள் காதலன் அதைப் பரிசாகத் தந்ததாகக் கூறப்பட்டது.

மணமகன் ஹேமேந்திர மெராவி பரிசாக வந்த கருவிக்கு மின்இணைப்பு தர முயன்றபோது அது வெடித்தது.

சம்பவ இடத்திலேயே அவர் மாண்டார். அவரது சகோதரர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

வெடிப்பைத் தொடர்ந்து அந்த அறையின் சுவர்களும் கூரையும் இடிந்து விழுந்ததாகக் கூறப்பட்டது. சம்பவம் நடந்தபோது மணப்பெண் தன் தந்தை வீட்டில் இருந்ததாகக் கூறப்பட்டது.

காவல்துறையினர் பரிசுப் பொருள்களின் பட்டியலைச் சோதித்தபோது மணமகளின் முன்னாள் காதலன் குறித்துத் தெரியவந்தது.

சார்ஜு எனும் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில், தனது காதலி வேறொருவரைத் திருமணம் செய்வது குறித்துச் சினமடைந்ததாகவும் அதனால் வெடிபொருளைப் பரிசில் மறைத்து வைத்துத் தந்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.

ஏற்கெனவே திருமணமான சார்ஜு இரண்டாவதாக அந்தப் பெண்ணை மணக்க விரும்பியதாகவும் அதற்கு மறுப்புத் தெரிவித்த அந்தப் பெண் ஹேமந்த்ராவை மணந்ததாகவும் தெரியவந்துள்ளது.

எனவே, பரிசிற்குள் வெடிபொருளை மறைத்து, அதைத் திருமண மண்டபத்தில் சார்ஜு வைத்துச் சென்றதாகக் கூறப்பட்டது.

அவர் சுரங்கத்தில் வேலை செய்வதால் எளிதாக வெடிபொருள்கள் கிடைத்திருக்கக்கூடும் என்று இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்