புதுடெல்லி: டெல்லியில் ஒரே நாளில் 300 பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பதற்றம் நிலவியது. நாட்டில் உள்ள சில விமான நிலையங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களாக டெல்லியில் உள்ள பள்ளிகள், பெரிய கட்டடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும், தீவிர சோதனைக்குப் பிறகு அவை வெறும் மிரட்டல்கள் என்று தெரிய வந்ததால் மக்கள் அச்சமின்றி உள்ளனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) ஒரே நாளில் 300க்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கும் டெல்லி உள்ளிட்ட சில முக்கியமான விமான நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
‘டெரர்ரைஸெர்ஸ்111’ என்ற குழுவின் பேரில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பெரும்பாலான பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் வழி மிரட்டல் விடுக்கப்பட்டது. காலை 6 மணி முதல் மிரட்டல்கள் வந்ததைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டன. எனினும், எந்த இடத்திலும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.