தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டெல்லியில் 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; ஒரே வாரத்தில் 2வது சம்பவம்

1 mins read
1a85ac2d-ef36-4c1a-9590-d44f16fa447c
வெடிகுண்டு வைக்கப்பட்டதாகத் தகவல் வந்ததையடுத்து ஒரு பள்ளிக்கூடத்தில் அதிகாரிகள் சோதனை செய்தனர். - படம்: ஊடகம்

புதுடெல்லி:  தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வெடிகுண்டு நிபுணர்கள் அந்தப் பள்ளிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

பள்ளிகளில் உள்ள கணினிப் பிரிவுகளை ஊடுருவிய மர்ம நபர்கள், பள்ளி கட்டடங்களில் பைப் குண்டுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களை வைத்திருப்பதாகவும் வெடிகுண்டுகள் வெடிக்காமல் இருப்பதற்கு 25,000 அமெரிக்க டாலர்களை தரவேண்டும் என்றும் மிரட்டல் விடுத்தனர்.

அவர்கள் தங்களை  ‘பயங்கரவாதிகள் 111’ என்னும் குழுவினர் என தெரிவித்துக் கொண்டனர்.

எந்தெந்த பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது என்ற விவரம் வெளியாகவில்லை.

இருப்பினும், மால்வியா நகர் மற்றும் நஜாப்கரில் உள்ள பள்ளிகள் மற்றும் டிஏவி பப்ளிக் பள்ளி, ஃபெய்த் அகாடமி, டூன் பப்ளிக் பள்ளி மற்றும் சர்வோதயா வித்யாலயா ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அண்மையில் இதேபோன்று 32 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி ஹவுஸ் ராணியில் உள்ள சர்வோதயா கன்யா வித்யாலயா பள்ளியில் வெடிகுண்டு செயலிழப்புப் படை மற்றும் மோப்ப நாய் படை உள்பட டெல்லி காவல்துறையின் பல குழுக்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு மே மாதம், கிட்டத்தட்ட 300 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்தன, அவை பின்னர் போலியானவை என தெரிய வந்தது.

குறிப்புச் சொற்கள்