மும்பை: மும்பையிலிருந்து திங்கட்கிழமை (மார்ச் 10) நியூயார்க் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், நடுவானில் பாதுகாப்பு மிரட்டல் கண்டறியப்பட்டதை அடுத்து மும்பைக்கே திரும்பியது.
‘ஏஐ119’ விமானம் திங்கட்கிழமை காலை 10.25 மணிக்கு (இந்திய நேரம்) சத்ரபதி சிவாஜி அனைத்துலக விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
விமானத்தின் கழிவறை ஒன்றில் வெடிகுண்டு மிரட்டல் குறிப்பு காணப்பட்டதாக ‘பிடிஐ’ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
அந்த போயிங் 777-300 வகை விமானத்தில் 322 பேர் பயணம் செய்தனர். அவர்களில் 19 பேர் விமானச் சிப்பந்திகள் என்று அது குறிப்பிட்டது.
சம்பவத்தை உறுதிசெய்த ஏர் இந்தியா நிறுவனம், விமானம் மீண்டும் மும்பைக்குத் திரும்புவதற்குமுன் பாதுகாப்பு நடைமுறைகள் அனைத்தும் முறையாகப் பின்பற்றப்பட்டதாகக் கூறியது.
விமானத்திலிருந்த அனைவரின் பாதுகாப்புக் கருதி விமானம் மும்பைக்கே திரும்பியதாக அது குறிப்பிட்டது. பாதுகாப்பு அமைப்புகள் விமானத்தைச் சோதனையிடுவதாகவும் நிறுவனம் அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைப்பதாகவும் ஏர் இந்தியா நிறுவனப் பேச்சாளர் கூறினார். பாதுகாப்பு மிரட்டல் குறித்த மேல்விவரங்கள் வெளியிடப்படவில்லை.
அந்த விமானம் மீண்டும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) அதிகாலை 5 மணிக்கு நியூயார்க் புறப்படும் எனக் கூறப்பட்டது.
அதுவரை, பயணிகள் அனைவருக்கும் ஹோட்டல் அறை, உணவு, இதர உதவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா கூறியது.

