தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டெல்லி, மும்பை உயர் நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

1 mins read
258383ca-23f8-483c-a7ca-4eea6785841f
வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து மும்பை உயர் நீதிமன்ற வளாகத்தினுள் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். - படம்: ஏஎன்ஐ

புதுடெல்லி/மும்பை: டெல்லி, மும்பை உயர் நீதிமன்றங்களுக்கு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.

இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் நீதிமன்ற வளாகங்களைவிட்டு வெளியேற்றப்பட்டனர்

அவ்விரு உயர் நீதிமன்ற வளாகங்களிலும் காவல்துறை சோதனைகளை மேற்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காலை 8.39 மணிக்கு டெல்லி உயர் நீதிமன்றத் தலைமைப் பதிவாளர்க்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான மின்னஞ்சல் வந்தது என்றும் பின்னர் அதுபற்றி நீதிபதிகள் சிலருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் பிடிஐ செய்தி கூறியது.

ஆயினும், நீதிபதிகள் சிலர் 11.35 மணிவரையிலும் சிலர் நண்பகல் வரையிலும் தங்களது நீதிமன்ற வளாகங்களில் இருந்ததாக அச்செய்தி குறிப்பிட்டது.

இதனிடையே, மிரட்டலின் அடிப்படையில் நீதிமன்ற வளாகத்திலிருப்போரை வெளியேற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக மும்பை காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

“மும்பை உயர் நீதிமன்றத்திற்கும் தனியாக மின்னஞ்சலில் மிரட்டல் வந்ததா அல்லது டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வந்த மின்னஞ்சலிலேயே மும்பை உயர் நீதிமன்றத்தின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்ததா எனத் தெளிவாகத் தெரியவில்லை,” என்று அந்த அதிகாரி கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, இம்மாதம் 9ஆம் தேதி டெல்லி முதல்வரின் தலைமைச் செயலகத்திற்கும் மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரிக்கும் மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

கடந்த சில மாதங்களாகப் பல பள்ளிகளுக்கும் கல்வி நிலையங்களுக்கும் பொய்யாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்ட நிலையில், இப்போது நீதிமன்றங்களுக்கும் அத்தகைய மிரட்டல்கள் வரத் தொடங்கியுள்ளன.

குறிப்புச் சொற்கள்