இந்திய விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்திய விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

1 mins read
d2799449-cb55-4b00-873b-0e5bc3ee6526
நள்ளிரவுவரை நடத்தப்பட்ட சோதனையில் விமானத்தில் சந்தேகப்படும்படியாக எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. கோப்புப்படம்: புளூம்பெர்க் -

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இருந்து புனே நகருக்கு நேற்று (12-1-2023) செல்லவிருந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகத் தொலைபேசிவழி மிரட்டல் விடுக்கப்பட்டது.

இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து மாலை 6 மணியளவில் SG-8938 என்ற அவ்விமானம் புறப்படவிருந்தது. ஆனால், வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, அவ்விமானத்தில் பயணிகள் ஏறுவது நிறுத்தப்பட்டு, வெடிகுண்டுச் சோதனைப் பிரிவினர் அழைக்கப்பட்டனர்.

நள்ளிரவுவரை நடத்தப்பட்ட சோதனையில் சந்தேகப்படும்படியாக அவ்விமானத்தில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளியாக இருக்கலாம் என்று காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறினார்.

சில மணி நேரத் தாமதத்திற்குப்பின் பயணிகள் அனைவரும் இன்னொரு விமானத்தில் புனேவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இப்படி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது ஒரே வாரத்தில் இது இரண்டாம் முறை. சில நாள்களுக்குமுன் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இருந்து கோவாவிற்குச் சென்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மிரட்டலை அடுத்து, அவ்விமானம் குஜராத் மாநிலம், ஜாம் நகரில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

பல மணி நேர சோதனைக்குப்பின் அம்மிரட்டலும் வெறும் புரளிதான் எனத் தெரியவந்தது.