தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹைதராபாத்தில் நான்கு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்; தொடர் தேடுதல் வேட்டை

1 mins read
a055c350-7215-4dc3-818e-5af1e3ab8cf3
சோதனை நடவடிக்கைகளின்போது சந்தேகத்திற்கிடமான எந்தப் பொருள்களையும் காவலர்கள் கண்டுபிடிக்கவில்லை எனக் கூறப்பட்டது. - படம்: இந்திய ஊடகம்

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள பெருநகர உரிமையியல் நீதிமன்றம், ஆளுநர் மாளிகை, ஜிம்கானா கிளப், செகந்தராபாத் உரிமையியல் நீதிமன்றம் ஆகியவற்றில் வெடிகுண்டு வெடிக்கும் என மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்ததை அடுத்து, காவலர்கள் முழு விழிப்புநிலையில் இருந்தனர்.

செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் பீதியைக் கிளப்பிவிட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட வளாகங்களில் காவலர்கள் முழுவீச்சில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் ஆர்டிஎக்ஸ் அடிப்படையிலான மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் சாதனங்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும் மிரட்டல் செய்தியில் கூறப்பட்டிருந்தது.

ஆளுநரின் அதிகாரபூர்வ இல்லமான ராஜ்பவன், ஹைதராபாத், செகந்தராபாத் நகரில் உள்ள ஜிம்கானா கிளப், உரிமையியல் நீதிமன்றம் உள்ளிட்ட நான்கு இடங்களிலும் வெடிகுண்டு செயலிழப்பு, மோப்ப நாய்ப் படைகளின் உதவியுடன் சோதனை நடவடிக்கைகளை காவலர்கள் முடுக்கிவிட்டனர்.

சோதனையின்போது எந்தவொரு சந்தேகத்திற்கிடமான பொருள்களையும் தாங்கள் கண்டுபிடிக்கவில்லை என்று காவலர்கள் தெரிவித்தனர்.

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் இருந்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வாடிக்கையாளர்கள் வெளியே ஓடிவந்ததால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

நீதிமன்ற வளாகத்தில் இருந்த அனைவரும் வளாகத்தை விட்டு உடனடியாக வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டபோது நீதிமன்ற அரங்குகளில் நடந்து கொண்டிருந்த அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டன.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சிலரின் பெயரில் அதிகாலையில் இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மின்னஞ்சலை அனுப்பி, பீதியைப் பரப்புவதற்குக் காரணமானவர்களை அடையாளம் கண்டறிய காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்