மும்பை: மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்போவதாக விடுக்கப்பட்ட பயங்கரவாத மிரட்டலை அடுத்து, மும்பையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மும்பையில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தப்படும் என தொலைபேசி வழி இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது.
மும்பை காவல்துறை உதவி மையத்துக்கு வந்த அந்த தொலைபேசி அழைப்பில், 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட 34 வாகனங்கள் மும்பை மாநகரத்துக்குள் நுழைந்துள்ளன என்றும் அது வெடித்தால் மொத்த நகரமும் அழிந்துபோகும் என்றும் மிரட்டல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மும்பை காவல்துறையின் ‘வாட்ஸ்அப்’ எண்ணுக்கும் இதே மிரட்டல் செய்தி வந்துள்ளது.
இம்முறை லஷ்கர்-இ-ஜிஹாதி என்ற அமைப்பைச் சேர்ந்த 14 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளதாகவும் அவர்கள்தான் மும்பையில் தாக்குதல் நடத்த இருப்பதாகவும் தொலைபேசியில் விடுக்கப்பட்ட மிரட்டலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, மும்பை மாநகரம் காவல்துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.