இந்திய விண்வெளி நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

1 mins read
da4b784a-4cc8-462d-ac3b-835da956695b
தீவிர தேடுதலுக்குப் பிறகு வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என உறுதிப்படுத்தப்பட்டது. - கோப்புப்படம்: ஊடகம்

திருப்பதி: ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அங்குத் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

இந்தியாவின் ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்திலுள்ள அந்த விண்வெளி நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) நள்ளிரவு மிரட்டல் வந்ததாகக் கூறப்பட்டது.

அதனையடுத்து, பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் இணைந்து அங்குத் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன. முடிவில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனக் கண்டறியப்பட்டது.

சென்னையில் மத்தியத் தொழிலகப் பாதுகாப்புப் படையினருக்கு அம்மிரட்டல் வந்ததாகச் சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையப் பாதுகாப்புப் படையினரும் திருப்பதி மாவட்டக் காவல்துறையினரும் விழிப்புநிலையில் வைக்கப்பட்டனர்.

அந்த இந்திய விண்வெளி ஆய்வு நிலைய (இஸ்ரோ) வளாகத்தின் உள்ளும் புறமும் அருகிலுள்ள பகுதிகளிலும் தீவிர தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதே நேரத்தில், அதனையொட்டிய கடலோரப் பகுதியிலும் இந்தியக் கடலோரக் காவற்படை சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

பின்னர் அந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

சென்ற மாதம் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலை அடுத்து, சதீஷ் தவான் விண்வெளி நிலையப் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகைகள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

மத்தியத் தொழிலகப் பாதுகாப்புப் படையின் விரைவுச் செயற்பிரிவு, வெடிகுண்டுச் செயலிழப்புப் பிரிவு, தீயணைப்புப் படை, மருத்துவக் குழு உள்ளிட்ட பாதுகாப்பு, அவசரகாலப் பிரிவுகள் அந்த ஒத்திகையில் பங்கேற்றன.

குறிப்புச் சொற்கள்