புதுடெல்லி: வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து இண்டிகோ விமானம் லக்னோவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
தலைநகர் டெல்லியிலிருந்து 222 பயணிகளுடன் இண்டிகோ விமானம் மேற்கு வங்கத்தின் பாக்டோக்ராவிற்கு ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) புறப்பட்டது. அப்போது விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து, காலை 9.17 மணியளவில் விமானம் லக்னோவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்திலிருந்த பயணிகள், ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
தரையிறக்கப்பட்ட விமானம் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது. பிறகு வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், விமான நிலைய அதிகாரிகள் ஆகியோர் தீவிரச் சோதனை மேற்கொண்டனர்.
முதற்கட்ட சோதனையின்போது, பாதுகாப்புப் படையினர் ஒரு மெல்லிய காகிதத்தில் கையால் எழுதப்பட்ட குறிப்பைக் கண்டெடுத்தனர். அதில், விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக எழுதப்பட்டிருந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

